Sunday, March 4, 2012

அரவான் - எதற்காக பார்க்க வேண்டும்?




முதலிலேயே சொல்லி விடுகிறேன் அரவான் திரைப்படம் ஆஹா ஓஹோவென இல்லை தான் எனினும் படம் மோசமில்லை என்பேன்.இப்படம் ஒரு நல்ல முயற்சி என தாரளமாக கூறலாம்.

 இணையத்திலும் டிவிட்டரிலும் இப்படம் குறித்து எதிர்மறை விமர்சனங்கள் உலாவி வரும் வேளையில் இம்மாதிரியான முயற்சிகளுக்கு வலிந்து ஆதரவு திரட்ட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படுகிறது.

 எத்தனையோ ஹீரோயிச அபத்தங்கள் நிறைந்த படங்களை கைதட்டி ரசித்து பார்க்கும் கூட்டம் அரவான் போன்ற படங்களை மட்டும் பூதக் கண்ணாடிக் கொண்டு பார்த்து,வேண்டுமென்றே குறை சொல்வது வேடிக்கையாய் இருக்கிறது.

 பத்தோடு பதினொன்றாக பார்த்தால் அரவான் ஒரு நல்ல தமிழ் படம் என்றே 
சொல்லிவிடலாம்,எனினும் எடுத்துக் கொண்ட களம் சொல்ல வந்த கதை அதை சொல்லிய முறை என்று ஆராய்தால் இப்படம் முழு நிறைவு தரக்கூடிய படைப்பாக வரவில்லை தான்.

 ஏனைய தமிழ் படங்கள் எல்லாம் என்னவோ நேரடியாக கேன்ஸ் பட விழாவில் 
திரையிடப்படுவது போன்றும்,பார்வையாளனுக்கு முழு கலாபூர்வ அனுபவம் தரக்குடியதாக இருப்பது போன்றும் இப்படம் மட்டும் அதிலிருந்து நழுவி தமிழ் 
சினிமாவிற்கு திருஷ்டி பரிகாரமாக அமைந்து விட்டதாக எண்ணக்கூடிய வண்ணம் வரும் விமர்சனங்களை தான் ஏற்க முடியவில்லை.



 இத்தகைய சூழ்நிலையில் அரவான் போன்ற படங்களை நாம் எதற்காக பார்க்க 
வேண்டும் என்று புரிந்து கொள்வது அவசியமாகபடுகிறது,அக்காரணங்களை 
பாப்போம்...

 முதலில் இன்றைக்கு 30 வயதுக்குள் இருக்கும் இளைஞர் மற்றும் சிறுவர்களிடம் சென்று நம் வரலாற்றை பற்றி சொல்லுமாறு கேட்டு பாருங்கள் அவர்கள் சொல்வது இப்படி தான் இருக்கும் 
           
          "காந்தி தாத்தா இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தந்தார்,நேரு இந்தியாவின் முதல் பிரதமர்!! ஷாஜகான் தாஜ் மஹாலை கட்டினார்,கஜினி முகமது இந்தியா மீது 17முறை படை எடுத்தார்,வள வள வள...."

(ஞே...இது இந்திய வரலாறு ஆச்சே)அட நம்ம தமிழர் வரலாறு பத்தி சொல்லுப்பா ?

          "ஆங்..ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயிலை கட்டினார்,கரிகால் 
சோழன் கல்லணையை கட்டினார்,தமிழ் பாட்டி வடை சுட்டுக் கொண்டிருக்கும் போது ஒரு காகம் வந்து.......!!"

 மெக்காலே கல்விமுறை ஐந்து மதிப்பெண் பெற கற்று கொடுத்தது இது மட்டும் தான்.இம் மண்ணை சேர்ந்த நம் முன்னோர்களின் வாழ்க்கை முறை எப்படி இருந்திருக்கும் என்ற சிறிய அறிவு கூட பல இளைஞர்களுக்கு இருக்காது என்பதே என் துணிபு(அதில் நானும் ஒருவன் என்பதால்)

 குறைந்தது அரவான் பார்க்கும எழுபத்தி ஐந்து சதவிதத்தினருக்கேனும் இப்படி களவு செய்வதே பிழைப்பாக கொண்ட மக்களும்,காவல் காக்க ஒரு கூட்டமும் மீறி களவாடி சென்று விட்டால் அதற்கு இடாக பொருள் தந்து களவு போன பொருளை மீட்டு வருதலும் நம் மண்ணில் வழக்கமாக இருந்தது என்பதே புதிய தகவலாக இருக்கும் என்பதும் என் துணிபு.

 இம்மாதிரி படங்கள் மட்டுமே நம் முப்பாட்டன்கள் வாழ்ந்த கால கட்டத்தின் சூழலை அறிமுகம் செய்து அதை தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்தை தூண்டவல்லது.ட்வென்டி ட்வென்டி,ஐபில் என நேரத்தை வீணடிக்கும் பெரும்பான்மையானவர்களை படிக்க வைப்பதெல்லாம் எளிதான காரியம் இல்லை அவர்களின் கவனத்தை இப்படி பட்ட படங்களின் மூலம் தான் கவர முடியும்.

 தண்ணீர் பஞ்சம்,உணவு பஞ்சம் போல் தமிழ் சினிமாவில் கதை பஞ்சம் என 
அவ்வப்போது கதை விடப்படும்.இந்தியிலிருந்து ரீமேக்,தெலுங்கிலிருந்து ரீமேக் என கூவி படங்களை தொடர்ந்து நம் தலையில் கட்டி பர்ஸை காலி செய்கிறார்கள் அப்படி என்ன தமிழ்நாட்டில் இல்லாத கதை என பார்த்தால் அந்த காலத்தில் எம்.ஜி.ஆர் நடித்த படத்தின் கதையாக இருந்து தொலைக்கும்.நம்மூரில் என்ன 
எழுத்தாளர்களுக்கு பஞ்சமா,கதைகளுக்கும் நாவல்களுக்கும் தான் பஞ்சமா ஆனால் அதெல்லாம் எடுக்க முடியாது என சாமி மீது சத்தியம் செய்து ஒரு கூட்டம் அலைகிறது,மீறி வருவதோ "உளியின் ஓசை" போல் இருந்து பயமுறுத்துகிறது இவ்வேளையில் அரவான் போன்ற படத்தின் வெற்றி நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தும்.இம்முயற்சி பாதி வெற்றியே பெற்றிருந்தாலும் அடுத்து ஒரு நல்ல நாவல் நல்ல தமிழ்படமாக வருவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தும்.

 அட எந்த ஹாலிவுட் படத்திலிருந்தும் காப்பி அடிக்காமல் இருந்ததற்கே பாராட்டலாமே.

 உலக நாயகன் மருதநாயகம் எடுக்கிறேன்,மர்ம யோகி எடுக்கிறேன் என சொல்லிக்கொண்டே இருக்கிறார் தவிர முடிந்த பாடில்லை,மணிரத்னம் அவர்கள் "பொன்னியின் செல்வன்" எடுப்பதாக அறிவித்து அதோடு நிறுத்தியும் விட்டார்.இப்படி பட்ட பிரபல படைப்பாளிகளுக்கே வரலாற்று படங்கள் எடுப்பது சவாலாக இருக்கும் சூழலில் அதிக அனுபவமில்லாத தனக்கென ஒரு மார்கெட் வேல்யூ இல்லாத வசந்தபாலன் போன்றவர் இப்படத்தை இந்த அளவிற்கேனும் எடுத்து வெளியிட்டதற்கே ஆர தழுவி பாராட்ட வேண்டும்.

 மிக எளிதாக அதிக பட்ஜெட்,பெரிய தொழில்நுட்ப கூட்டணி கிடைக்க வாய்ப்புள்ள ஷங்கர் போன்ற பெரிய இயக்குனர் இத்தகைய கதையை எடுக்க துணிவாரா ? இந்தியன் தாத்தாவை திரையில் காட்டியவர் தமிழ் முப்பாட்டனை காட்டுவாரா?

  எந்த பெரிய தொழில்நுட்ப கலைஞர்களும்,நடிகர்களும் துணைக்கு இல்லாமல் 
இம்மாதிரி படத்தை எடுத்து முடித்த வசந்த பாலனும் இதை தயாரித்த அம்மா 
கிரியேசனும் நிச்சயம் பாராட்ட பட வேண்டியவர்கள்.

 இப்போது வழக்கமாக படத்தில் வரும் ஹிரோக்களுக்கு என்ன வேலை தெரியுமா ? ஒரு வேலையும் கிடையாது,ஊருக்கு நேந்துவிட்ட பிள்ளையாக சுற்றிக் கொண்டே இருப்பது தான்.ஏனெனில் அப்போது தான் கதாநாயகி தடுக்கி விழும் போது இடுப்பில் கை கொடுத்து தாங்கி பிடிக்க முடியும்,பஞ்ச் டயலாக் அடித்து பறந்து பறந்து சண்டை போட முடியும்.

 ஆனால் அரவான் அப்படியல்ல,இப்படத்தின் நாயகனாக வரும் வரிப்புலி என்கிற சின்னா என்னும் கதாபாத்திரம் நம் மண்ணில் ரத்தமும் சதையுமாய் என்றோ வாழ்ந்து மறைந்த ஒரு மனிதனின் பதிவு.அவனது வாழ்க்கை சரியாய் பதிவு செய்யப் படவில்லை என்றாலும் இது போன்று வாழ்ந்து மறைந்த நம் தாத்தாவின் தாத்தாவை பற்றி எப்போது தெரிந்து கொள்ள போகிறோம். 

 எத்தனை நாளைக்கு தான் பெருமாளின் பெருமையையும்,சிவினின் திருவிளையாடலையும் மட்டுமே பார்த்துக் கொண்டு இருப்பது.ஊருக்கு வெளியே காவல் தெய்வமாக குல சாமியாக ஆற்றங்கரையில் நடுக்கற்களாக நிற்பவர்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டாமா.

 வேலாயுதத்தை வெற்றி பெற செய்த நாம்,f**king gameயை சூப்பர் ஹிட் ஆக்கிய 
நாம் அரவான் போன்ற படங்களை வெற்றி பெற செய்வதால் என்ன குறைந்து விட போகிறோம் ?

 அரவான் யார்? இதே மண்ணின் காடு,மலை,மண்,புழுதியுடன் வாழ்ந்து வீரத்திற்காக மானத்திற்காக ஊருக்காக மக்களுக்காக உயிர் தியாகம் செய்து பின் அதே மக்களின் கடவுளாக காவல் தெய்வமாக மாறி போன எண்ணற்றவர்களின் ஒருவன்.இந்த படத்தின் வெற்றி நாம் மறந்து விட்ட பல வரலாற்றின் பக்கங்களை பல நல்ல முயற்சிகளை திரைப்படங்களாக்கும் என்ற நம்பிக்கையுடன்...

 அரவானை வரவேற்போம்.