Friday, June 15, 2012

காக்கா ராதாகிருஷ்ணன் என் நினைவில்

தமிழின் நிகரில்லாத சிறந்த நடிகர்களில் காக்கா ராதாகிருஷ்ணனும் ஒருவர்.அவரது மறைவு செய்தி இன்றைய நாளை வருத்தமாக்க   பொதுமானதாக இருக்கிறது.


எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலே இவரை திரைப்படங்களில் பார்த்து 
வந்தேன் என்ற போதும் இவரது எஸ்.டி.டி பற்றி எனக்கு அதிகம் தெரியாது.கருப்பு வெள்ளை காலத்திலிருந்து நடிப்பவர் என்பதும் தொடக்கத்தில் நாயகனாகவும் பின்பு துணை நாயகன் வேடங்களில்,முக்கிய வேடங்களில் நடித்தவர் என்பதும் நாடக பாரம்பரியத்தில் இருந்து வந்தவர் என்பதுமே இன்று வரை இவரை பற்றி எனக்கு தெரிந்த சொர்ப்ப தகவல்.


 பள்ளி நாட்களில் பார்த்த "காதலுக்கு மரியாதை" திரைப்படமே இவரை பற்றிய முதல் நினைவாகவும் அவரின் ரசிகனாக மாறிய கணமாகவும் என்னில் பதிந்துள்ளது.அப்படத்தில் தான் நடிகர் விஜய் முதலும் கடைசியுமாய் எம்.பி.ஏ படித்தார்.தாமு சித்தப்பாவும் சார்லி பெரியப்பாவும் படத்தில் அவரது நண்பர்கள்.கதைப்படி அவர்கள் தங்கி இருக்கும் வீட்டின் உரிமையாளர் பாத்திரம் காக்கா ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு.மனைவியை இழந்து மனநிலை பாதிக்கப்பட்டு துப்பாக்கியுடன் அலையும் பாத்திரத்தில் அனாயாசமாய் பொருந்தி இருப்பார்.அவரை பற்றி தெரியாது அவ்வீட்டிற்கு வரும் சிவக்குமார் அவரை மதிக்காது கடந்து செல்கையில் துப்பாக்கி காட்டி மிரட்டும் நடிப்பும்,அக் காட்சியின் முடிவில் துள்ளும் நாய்க்குட்டியை கைகளுக்குள் அடக்குவது போல் துப்பாக்கியை கைகளில் மறைத்து தலையை ஆட்டி போக சொல்லும் பாங்கும்,அந்த நொடியில் நாவை உதடால் கடித்து கண்கள் விரிய தரும் ஒரு எக்ஸ்பிரசனும் எல்லாம் கண்களின் ஸ்க்ரீன் சேவரில் தங்கிவிட்ட காட்சிகளில் ஒன்று.அதை போலவே ஷாலினியின் அண்ணன் அன்ட் குருப் விஜய் அன்ட் குருப்பை அடிக்கையில் துப்பாக்கியால் சுட்டு அவர்களை விரட்டிவிட்டு "ரொம்ப அடிச்சிட்டான்களா.." என மறுகுவதும் சட்டென முகம் மாறி "நான் சுட்டா கூட என்னை ஜெயில்ல போட முடியாதே ஏன்னா நான் தான் பைத்தியம் ஆச்சே...." என முடிப்பதும் அவரால் மட்டுமே நிகழ்த்த முடிந்த சாமர்த்தியம்.


என் நினைவில் ஆரம்பம் முதலே முதியவராகவே பதிந்த விட்டவரை அதன் பின் வியட்நாம் காலனி,உன்னுடன் போன்ற படங்களில் கூட மனநிலை சரியில்லாத பாத்திரத்திலேயே தொடரவைத்தது தமிழ் சினிமாவின் க்ளிஷே.இடையில் மனம் விரும்புதே உன்னை படத்தில் நாயகியின் ஜொள்ளு தாத்தாவாக வந்து ரகளை செய்திருப்பார்.மேலும் சில படங்களில் செட் ப்ராபர்டியாகவும் கடந்து சென்றதாக ஞாபகம்.


இவரை நினைத்ததும் நினைவுக்கு வரும் இன்னொரு படம் "தேவர் மகன்".நடிகர் திலகம் சிவாஜியின் அண்ணன் பாத்திரம் இவருக்கு கொடுக்கப்பட்டது கூட இவரின் நடிப்பை கௌரவ படுத்துவதற்காக இருக்குமோ என்று கூட பின்னாட்களில் யோசித்திருக்கிறேன்.அப்படத்தை டிவியில் பார்த்து இவருக்கு உண்மையாகவே  பக்கவாதம் வந்து கை கால்கள் செயல்படாது போய்விட்டது போலும் எனவும் பின் அவர் நடித்த மற்ற படங்களை பார்க்கையில அவ்வியாதியில் இருந்து மீண்டுவிட்டார் போலும் எனவும் குழப்பி கொண்டது இன்னும் நினைவில் இருக்கிறது .அத்தனை தத்துரபமான ஒரு நடிப்பை தந்திருப்பார்.


வியட்நாம் காலனி படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டுமே நடித்திருப்பார் எனினும் படம்முடிந்து வீட்டிற்கு செல்லும் வரை நினைத்து நினைத்து சிரிக்கும் படி இவரது நடிப்பால் பதிந்து போயிருக்கும் அக்காட்சி.இவ்வாறு ஒரு படத்தில் ஒரு சில காட்சிகள் வந்த போதும் மறக்க முடியாது நினைவில் பதிந்துவிடும் ஆளுமை மிக்கவர்.எனினும் அவரது அந்திம காலத்தில் அந்த ஒரு சில காட்சிகளில் ஆவது அவரை இன்னும் நிறைய பயன்படுத்திக் கொள்ளாதது தமிழ் சினிமாவின் இழப்பே.


வசூல்ராஜா படத்தில் கட்டிலில் இருந்து தள்ளாடிய படி எழுந்து வந்து கேரம் ஆடும் காட்சி இவரது நடிப்பாற்றலுக்கு ஒரு சோறு பதம்.பல மொழிகளில் பிரதி எடுக்கப்பட்ட அப்டத்தில் இவர் ஏற்ற பாத்திரத்தை மற்ற மொழிகளில் எவரும் இவர் போல் சிறப்பாய் செய்திருக்கவில்லை என்பது அக்காட்சியின் பிரதிகளை பார்த்தால் புரியும்.அக்காட்சியில் கண்களை உருட்டி விழித்து ரெட்டிற்கு பாலோ போட எத்தனிக்கும் இவரது முனைப்பை பார்த்து கமல் "யப்பா..." என பிரமிப்பது நடிப்பல்ல நிஜம்.


நடிகனை காமடியன்,ஹீரோ என முத்திரை குத்தி பிரித்து வைக்கும் தமிழ் சினிமாவின் மூடத்தனம் இவருக்கும் ஒரு முத்திரை இட்டு சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்பதே நிதர்சனம்.இவரை பற்றி அதிகம் தெரியாது என்னை போன்ற அறியாமை ரசிகர்களுக்கும் இவரை நன்கு அறிந்த ரசிகர்களுக்கும் இவரது நடிப்பின் விஸ்வரூபத்தை வெளிப்படுத்தும் படியான கதாபாத்திரத்தை தமிழ் சினிமா அமைத்து தராதது ஏமாற்றமே.

தலைமுறைகள் தாண்டி ரசிக்க வைத்த இவரது நடிப்பு அவரின் மரணத்தை தாண்டியும் என்றும் நிலைத்தேயிருக்கும்.