முதலில் ஒன்றை சொல்லிவிடுகிறேன் 'கடல்' படம் சரியில்லை தான்,அதை நானும் ஒத்துக்கொள்கிறேன்.அப்படத்தை தூக்கி பிடிப்பதோ விமர்சிப்பதோ இப்பதிவின் நோக்கமில்லை.ஆனால் மணிரத்னம் அவ்வளவு தான், ஃபார்ம் அவுட் ஆகிவிட்டார் போன்ற கருத்துக்களை ஏற்றுகொள்ள முடியவில்லை.என் ஆதர்ச இயக்குனர் பற்றிய கருத்துக்களுக்கு எதிர்வினையே இப்பதிவு.
முந்தைய படமான ராவணனும் தோல்வி இப்போது கடலும் சரியில்லை என்று சொல்பவர்கள்,மணிரத்னம் 'குரு' என்ற சர்வதேச தரத்திலான படம் எடுத்து ஐம்பது வருடங்கள் ஒன்றும் ஆகிவிடவில்லை என்பதை மறந்துவிட்டனர்.
கடல் படத்தின் முதல் அரைமணி நேர காட்சியை பார்த்தாலே புரியும் மணிரத்னம் எனும் ஜாம்பவான் அப்படியே தான் இருக்கிறார் என்பது, பிரார்த்தனைகளை டேப்ரிக்கார்டரில் பதிவு செய்யவதன் மூலம் மக்களை சர்ச்சிற்கு வரவைப்பதும் பின் அந்த டேப்ரிக்கார்டர் வெவ்வேறு இடங்களில் தொடர்ந்து பயன்படுத்தபடுவதும்,நான் பாவம் செய்துவிட்டேன் என நாயகன் சொல்ல நாயகி அவன் கைகளை தூசு தட்டுவது போல் தட்டி கேரம்போர்டில் விளையாட கற்றுக்கொள்ளும் குழந்தை ஸ்ட்ரைக்கர் பிடிக்க தெரியாமல் பிடிக்கும் உடல்மொழியுடன் அவனை பார்த்து "இப்போ எல்லாம் பாவமும் சரியா போச்சு" என்பதும் மணிரத்னம் எனும் இளமையான கதை சொல்லிக்கு மூப்பு வந்துவிடவில்லை என்பதற்கு சான்று.
இப்படத்தில் சிறிதும் பெரிதுமான லாஜிக் ஓட்டைகள் இருந்த போதிலும் இந்த படத்தை பொறுத்தவரை சில குழப்பங்கள் உள்ளது.காதல் பாடலான "மகுடி மகுடி" டைட்டிலில் சம்பந்தமில்லாமல் பயன்படுத்தப்பட்டது ஏன்? பிரிவுத் துயரில் வரவேண்டிய "நெஞ்சுக்குள்ள" மகிழ்ச்சியான தருணத்தில் பின்னணியில் பலகீனமாய் ஒலிப்பது ஏன் ? அதுபோலவே விடை தெரியா சில கேள்விகளும் உள்ளன, ட்ரைலரில் இடம்பெற்ற சில காட்சிகள் படத்தில் இல்லாததை கவனித்தீரா ? டீக்கடையில் பேசப்படும் "இந்த ஊர்ல மேசக்காரன்னா யாராக்கும்/சாமியாருக்கு எதுக்கு மேசக்காரன் கதை", அர்ஜுன் அரவிந்தசாமியிடம் "எந்த காயை நகர்த்தினா இந்த மாஜி பாதர மடக்கலாம்னு" போன்ற காட்சிகள் படத்தில் இடம்பெறவேயில்லை.இப்போது அக்காட்சிகளை பார்க்கும் பொழுது அக்காட்சிகள் இடம்பெற்றிருந்தால் படம் இன்னும் தெளிவாக புரிந்திருக்குமோ என தோன்றுகிறது.இதுபோலவே இன்னும் சில நடுவுல கொஞ்சம் காட்சிகளை காணும்...என்னாச்சி ? இந்த திரைக்கதை சொதப்பல்கள் தான் படத்தின் தோல்விக்கு காரணம்.(திரைக்கு பின் என்ன நடந்தது என புரியவில்லை.. சம்திங் இஸ் ராங் சம்வேர் )
மற்றபடி மேகிங்க் சிறப்பாகவே உள்ளது துளிக்கூட ஏமாற்றவில்லை.கண்டபடி ஏசிவிட்டு,என் அம்மா எங்க? என கதறும் சிறுவனும், ப்பா..ப்பா.. என குழந்தையாகவே மாறிவிடும் நாயகியும் ப்யூர் மணி சார் டச்.சோரம் போய்விடவில்லை அவர்.
சிறுவன் முதன்முதலில் கடலுக்கு செல்லும் காட்சியும்,இறுதியில் சில நிமிடங்களே வரும் இயேசுவின் ஊர்வல(டாப் ஆங்கிலில் எடுக்கப்பட்ட) காட்சியும் உலகத்தரம்.அதில் ஒளிப்பதிவாளரின் உழைப்பு சரிபாதி என்றாலும் மணிரத்னம் படத்தில் மட்டுமே காணக் கிடைக்கும் காட்சி படிமங்கள் அவை,தமிழில் இன்று வரை வேறெவரும் இல்லை இந்த தரத்தில் காட்சிகளை கொண்டுவரவல்லவர்.
மணிரத்னம் அவர்களிடம் சொல்ல ஒன்று இருக்கிறது "உங்கள் களம் இன்னும் உயர்ந்தது,ஸ்டீர்ட் கிரிக்கெட் விளையாட(இது உண்மையில்லை என்றபோதும்) ஆசைப்படாதீர்கள் குருவே!"
திருடா திருடா-வில் சறுக்கியதற்கு பிறகே அவர் பம்பாய்,இருவர் எடுத்தார் என்பதும்,உயிரே-விற்கு பிறகுதான் அலைபாயுதே,குரு எடுத்திருக்கிறார் என்பதையும் நினைவுபடுத்துகிறேன்.ஒரு ரசிகனாய் அவர் மீதான அதே அபிமானத்துடன்,நம்பிகையுடன் அவரது கம்பேக்கிற்காக காத்திருக்கிறேன்.
மணி சாருக்கு என்றென்றும் எனது அன்பும்,வாழ்த்துகளும்.