Tuesday, December 27, 2011

விழித்திருக்கும் இரவு
என்னைப் போல்
விழித்தே இருக்கிறது
இந்த இரவும்

மின்விசிறிகளும்
விளக்கும்
கூட
உறங்கவில்லை

தெரு விளக்குகள்
நின்றபடி
விழித்திருக்கிறது

காற்று
இந்நேரம்
கூட
அலைந்து கொண்டே
இருக்கிறது

என்னைப் போல்
விழித்திருக்கும்
நாய்கள்
குரைக்கும் வரை
இந்த இரவும்
அழகுதான்.Saturday, December 17, 2011

ரயிலுக்கு நேரமாச்சு...


ரயில் தண்டவாளம் 
கைதொடும் தூரத்தில் 
ஒண்டிக் குடித்தனம் 
ஏராளம்..

விரைந்து ஓடும்
ரயிலின் தாளத்தில் 
அதிர்ந்து ஆடும் 
வீடுகள்..

வாசல் வெளியே 
காலடி வைக்கையில்-சிதறி
தலையில் வந்துவிழும் 
குப்பைகள்..

யாரோ வீசும் 
எச்சில் இலை
வாசல் கோலத்தில்
வந்து விழும்..

மின்சாரம் இல்லா 
இருள் இரவில்
வேக நிலவாய்
கடந்து செல்லும்
ரயிலின் வெளிச்சம்..

ஆசை பிள்ளையோ
செல்ல நாய்க்குட்டியோ
இயந்திர ரயிலுக்கு
எல்லாம் ஒன்று தான்..

தலை கொடுப்பதும்
தவறி விழுவதும்
பத்தோடு ஒன்றாய்
சாதாரண விசயம்..

எனினும்
ரயிலின் கூவலே 
தாலாட்டாய்..
ரயிலின் அதிர்வில் 
குலுங்கும் தொட்டிலில்
நிம்மதியாய் தூங்குகிறது
என் பிஞ்சுக் குழந்தை.


Monday, December 5, 2011

தி டர்டி பிக்சர் - ' சில்க் ' தி குயின்தி டர்டி பிக்சர் ஸ்டில்ஸ் பார்த்து வித்யா பாலனா இப்படி என ஷாக் ஆனவர்களில் நானும் ஒருவன்.எப்படியும் இந்த படமெல்லாம் நம்மூரில் வராது படத்தின் முக்கிய காட்சிகளை மட்டும் வழக்கம் போல் நெட்டில் டவுன்லோட் செய்து பார்த்து பொது அறிவை வளர்த்துக்க வேண்டியதுதான்னு நினைச்சேன் !

  ஆனால் எங்க ஊரிலும் இந்த படம் வந்திருப்பதை பார்த்து ஆச்சர்யப்பட்டுபோனேன் .இந்த படத்திற்கு செல்லலாமா வேண்டாமா என யோசித்தபடியே சென்று கொண்டிருந்தேன்.பஸ் வேறு முதல் நிறுத்தத்துடன் வேறு பக்கம் திரும்பிவிட்டது,நம் கலைதாகத்துக்கு எத்தனை தடைகள் என நொந்த படி இறங்கி வேகமாக நடந்தேன்..ஷோவுக்கு நேரமாச்சே..

 டிக்கெட் கொடுப்பவர் ஹிந்தி படம் சார் என்றார்.'பார்க்க வேண்டிய ஹிந்தி படம் எவ்வளோ இருக்கு 'peepli live' பார்த்தியா நீ' என்றது மனசாட்சி !! அப்போது இன்னொரு குரல் (மனசாட்சி டபுள் ஆக்ட்பா) 'வசனமாடா முக்கியம் படத்த பாரு' என்றது.நல்லவேளையாக படம் ஆரம்பிக்கவில்லை ஆறரை மணி படத்தை ஆறே முக்கால் வரை போடாத ஆப்ரேட்டரின் நேரந்தவறாமையை மனதுக்குள் பாராட்டி இடம் பிடித்து அமர்ந்தேன்.படம் பார்க்க வந்திருந்த முகங்களை எல்லாம் பார்த்தேன் ஒண்ணும் ஹிந்தி தெரிஞ்ச மூஞ்சி மாதிரி தெரியலை எல்லாம் நம்ம மாதிரி மொழியை தாண்டிய கலை ஆர்வமிக்கவர்கள் என நினைத்துக் கொண்டேன்.

 படம் தமிழில் ஓடியது தமிழ் டப்பிங் என்று பின்பு தான் உரைத்தது.வித்யா பாலன் திரையில் வந்ததும் இவரா சில்க் என்ற கேள்வி எழுந்தது.சில்க்கோ டஸ்கி பியூட்டி வித்யாவோ வொயிட்டு ஸ்கின்னு கேளு கேளு.சில்க்கின் போதை ததும்பும் கண்களுக்கு இணையாக யாரும் வர மாட்டார்கள் என்றாலும் வாகை சூட வா இனியா மாதிரி ஒரு பெண் நடித்திருந்தால் கொஞ்சம் பொருத்தமாக இருந்திருக்கும் என தோன்றியது.

 இதெல்லாம் படம் தொடங்கி சில நிமிடங்கள் வரை தான்.அதன் பின் நடிகை ஆக ஆசைப்பட்டு வீட்டை விட்டு ஓடி வரும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை நீங்கள் சாட்சியாக பார்க்க துவங்கி விடுவீர்கள்.

  வித்யா பாலன் துவக்கத்தில் ரேஷ்மா என்ற பாத்திரத்தில் தாவணி அணிந்த படி பிராவின் பட்டை தெரிவதை பற்றிய பிரக்ஞை சிறிதும் இன்றி அலட்சியமாய் அலைகிறார்.வெளிப்படையானவள் என்பதன் குறியீடு போலும்.சாட்டையில் அடி வாங்கியபடி ஆடும் காட்சியில் நடிக்க மற்றவர்கள் தயங்க துணிச்சலாய் அதை ஏற்று தன் முதல் வாய்ப்பை பெறுகிறாள்.

 தனக்கென அடையாளம் தேடிக் கொள்ள ஆசைப்படும் ஒவ்வொரு பெண்ணும் கண்ணுக்கு தெரியாத சாட்டை அடிகளை பொறுத்துக் கொண்டுதானே வாழ்கிறார்கள்.விளம்பரங்களில்,வார இதழ்களின் முன் அட்டையில்,நடுப்பக்கத்தில் எதை விற்கிறார்கள் ? பெண்ணின் கவர்ச்சியை தானே.சினிமாவை பற்றி சொல்லவே வேண்டாம்.மாஸ் ஹிரோ, ஹிரோ தான்  எல்லாம் என்பார்கள் அப்படியென்றால் பெண்களே நடிக்காத ஒரு படத்தை எடுக்க வேண்டியதுதானே ? செய்வார்களா ? அப்படி செய்தால் எத்தனை ஆண்கள் அதை பார்ப்பார்கள் ! அவள் அன்றி ஒர் அணுவும் அசையாது.

 ஆண்களால் நிர்மாணிக்கப்பட்ட இந்த உலகத்தில் பெண்ணின் உடலை கவர்ச்சி பொருளாக வியாபாரத்தின் தந்திரமாக மாற்றி வைத்திருக்கும் பொழுது அந்த கவர்ச்சியையே தன் மூல தனமாக,ஆயுதமாக பயன்படுத்தி ஒரு பெண் முன்னேற நினைத்தால் ஆண்கள் நிலைமை என்னாகும்.

 அதை தான் செய்து இந்த படத்தில் ரேஷ்மா என்ற தனி மனுஷி சில்க் என்ற ஸ்டாராக உயர்கிறாள்.தன் முன் வரும் தடைகளை எல்லாம் பார்த்து கண்ணடித்து சிரித்து,செல்லமாக கன்னத்தில் தட்டி மயங்கி விழ செய்து முன்னேறிக் கொண்டே இருக்கிறாள்.

  சாதுர்யமாய் பெண்ணிற்கு ஆண் போட்டிருக்கும் விலங்குகளான கற்பு,அச்சம்,மடம்,நாணம் எல்லாம் உடைத்து விட்டு சுதந்திரமாய் இருக்கும் பெண்ணின் முன் ஆண் என்ற பிம்பம் என்ன செய்து விட முடியும்.சில்க் அப்படி தான் இருக்கிறாள்.

 நீங்கள் கவர்ச்சியை ரசிக்க வேண்டும் என நினைத்தால் இந்த படத்தின் காட்சிகளை மட்டும் டவுன்லோட் செய்துபார்த்து மகிழ்ந்து கொள்ளுங்கள்.ஏனெனில் அசைவம் விரும்பி சாப்பிடுபவர்க்கு கூட திடிரென கசாப்பு கடையில் இருக்கும் இறைச்சியை பார்த்து இதையா நாம் உண்கிறோம் என குற்ற உணர்வு தோன்றுமல்லவா அப்படிபட்ட உணர்வு தான் இருக்கிறது இந்த படத்தில் சில்க் கவர்ச்சியாய் தோன்றும் போதெல்லாம்.

 படம் முழுதும் வித்யா பாலன் முக்கால் மார்பு தெரியும்படி தான் அலைகிறார் எனினும் அவரை சில்க் என்ற மனுஷியாக பார்க்க ஆரம்பித்த பிறகு அதையெல்லாம் சபலப் பார்வை பார்க்க முடியவில்லை.வித்யா பாலனை ராட்சஷி என்று தான் சொல்ல வேண்டும் அப்படி ஒரு நடிப்பு.படம் முழுதும் வித்யாவின் ராஜாங்கம் தான் இல்லையில்லை அராஜகம் தான். வித்யா பாலனின் அநாயாசமான சிரிப்பாகட்டும்,கிறக்கமாய் ஒற்றை கண்ணை சிமிட்டுதல் ஆகட்டும்,அலட்சியமாக சிகரெட் பிடிப்பதாகட்டும் எல்லாம் அத்தனை கட்சிதம்.தனக்கு எதிராக போராட்டம் செய்பவர்கள் பார்த்து அவர் பிளையிங் கிஸ் தரும் ஷாட் செம செம.

 சில்க்கை அசிங்கம்,ஆபாசம் என வர்ணித்து விட்டு கள்ளத்தனாமாய் அவளை ரசிப்பவர்கள் பற்றி அவள் பேசும் அந்த இடைவேளை காட்சி பளார் பளார் பளார்.இத்தனை திமிரான போராட்ட குணமுள்ள ஆளுமைமிக்க  தனித்தன்மையான பெண் பாத்திரம் இந்திய சினிமாவில் இதற்கு முன் வந்ததே இல்லை என சொல்லலாம்.

 சில்க் என்ற மனுஷியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் தான் படம்.எல்லா ஆண்களின் தூக்கத்தை கெடுத்த அவள் வாழ்க்கை எப்படி இருந்தது என இப்படம் சொல்கிறது.வெளியில் தெரியாமல் அவளை காதலிக்கும் ஆப்ரகாம் என்பவன் கூட வெளியில் அவளை திட்டி விமர்சித்த படியே உள்ளுக்குள் அவளை காதலிக்கிறான் அதனால் தான் என்னவோ அவன் படம் முழுதும் கருப்பு உடையில் வருகிறான்.

 நஸ்ருதீன் ஷா இம்ரான் ஹஸ்மி மற்ற அனைவருமே இந்த படத்தில்   சிறப்பாய் நடித்திருக்கிறார்கள்.நல்ல சிறப்பான டெக்னிக்கல் டிமும் அமைத்திருக்கிறது.ஹிந்தி தெரியாதவர்கள் படத்தை தமிழிலேயே பாருங்கள் வசனங்கள் அத்தனையும் செம ஷார்ப்.படத்தின் பலமே வித்யா பாலன் மற்றும் வசனம் தான்.

 ஆரம்பத்தில் அந்த தமிழ் டப்பிங் கொஞ்சம் படுத்துகிறது போக போக பழகி விடுகிறது.இத்தனை செய்தவர்கள் தமிழ் நாட்டை கொஞ்சம் அசலாக காட்டியிருக்கலாம்.படத்தில் காட்டப்படும் தமிழ் நாடும்,தமிழ் முகங்களும் செயற்கையாய் இருக்கிறது.படம் முழதும் அங்கங்கே விபூதி பூசிய முகங்கள் தென்படுகிறது தமிழர்கலாம் ஏனோ ஒட்டாமல் தனியே தெரிகிறது.

 நேரடியான ஹிந்தி படம் அதிகம் பார்த்த அனுபவமில்லாதவர்களுக்கு இந்த படத்தின் நடிப்பு வசன உச்சரிப்பு எல்லாம் கொஞ்சம் வித்யாசமாக தெரிய வாய்ப்புண்டு.நிச்சயமாக படம் போரடிக்காமல் செல்லும் என்பது உறுதி.

 இந்த படத்தின் பல விஷயங்களை சொல்ல எனக்கு விருப்பமில்லை அதையெல்லாம் நீங்கள் திரையில் பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

 ராம் கோபால் வர்மா ஒரு முறை ஒரு பேட்டியில் இப்படி கேட்டார் 'உங்களை தனியே ஒரு அறையில் வைத்து பூட்டி ஒரு ஆக்ஷன் படம்,ஒரு செக்ஸ் படம் சிடிக்களை தந்தால் எதை முதலில் பார்ப்பீர்கள்' என்று.நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள் சொல்லுங்கள் ? அப்படிப்பட்ட நம் மனதின் மறைக்கப்பட்ட கள்ளதனத்தின் நிழல் உருவமே சில்க் கதாபாத்திரம் அந்த பாத்திரம் வெறும் ஒரு பெண்ணை குறிப்பது அல்ல.அதனால் தான் எல்லோரும் அவளை ரசித்தார்கள் வெளியில் காட்டி கொள்ளாமலேயே.அதுவே அவளது வளர்ச்சியாகவும் வீழ்ச்சியாகவும் ஆனது.

 ஆண் கதாபாத்திரம் என்றால் எப்படி ஒரு தேவதாஸோ அப்படி பெண் பாத்திரத்திற்கு ஒரு சில்க்.இந்த படம் மீண்டும் மீண்டும் ரீமேக் செய்யப்படும் என்பது என் துணிபு.முப்பது வருடம் கழித்து இந்த படம் ரீமேக் செய்யப்படும் போது நாம் இந்த படத்தை பார்த்த நினைவுகளை அசைபோட்டு கொண்டிருப்போம்.வித்யா பாலன் முகமும் அதன் பின்னே நிஜ சில்க்கின் முகமும் நம் முன்னே நிழலாடும்.

 சில்க்கின் வாழ்க்கையை மேலோட்டமாக எடுத்துக் கொண்டு கற்பனையாக எடுக்கப்பட்ட படம் என்றாலும் படம் முடிகையில் நமக்கு எழும் வருத்தமும் கண்களில் எட்டி பார்க்கும் சில கண்ணீர் துளிகளும் நிஜ சில்க்கிற்கே அர்ப்பணம்.

 "நீ பொறக்கலைனா இப்படி கூட ஒரு பொண்ணால இருக்க முடியும்னு யாருக்கும் தெரியாமலே போயிருக்கும்" படத்தின் வரும் ஒரு வசனம்.இன்னொரு வசனம் "தோத்தா என்ன போட்டி சுவாரஸ்யமா இருந்துதில்ல ஜெயிச்சாலும் தோத்தாலும் சந்தோசம் மட்டுமே தருவா இந்த சில்க்"

 தோற்றால் என்ன ராஜியத்தை இழந்தால் என்ன ராணி ராணி தானே.இந்த சில்க்கும் ஒரு ராணி தான்.

 நட்சத்திர கலை நிகழ்ச்சி என்ற பெயரில் ஆபாச குலுக்கல் நடனங்களை குடும்பத்துடன் சேட்டிலைட் சேனலில் பார்க்க பழகிவிட்ட நாம் ஒரு கவர்ச்சி நடிகையின் வாழ்க்கையை சரியான கண்ணோட்டத்தில் பார்க்க துணிவோமா ? ஒரு பெண் பற்றிய இந்த படத்தை நம்மூரில் எத்தனை பெண்கள் பார்ப்பார்கள் ? பார்க்க துணிவார்கள் ? தெரியவில்லை...

என்னை பொறுத்தவரை தி டர்டி பிக்சர் - தி பெர்ஃபக்ட் பிக்சர் 


Sunday, November 27, 2011

மயக்கம் என்ன - வண்ணங்களின் இசை

 திரைப்பட விமர்சனம் எழுதும்போது படத்தின் கதையை சொல்ல மாட்டேன் என சொல்லி இருந்தேன் எனினும் மயக்கம் என்ன படத்தின் கதையை தெரிந்துக் கொண்டு பார்ப்பதே நலம். கேமரா வியு ஃபைண்டர் வழியே உலகத்தை பார்த்து அதில் பரவசம் அடையாதவரும், ஒரு காட்சியை புகைப்படமாக எடுத்து நிஜத்திற்கும் அதற்கும் உள்ள கவித்துவ வித்யாசத்தை ரசிக்காதவரும் யாரேனும் உள்ளனரா?

 வண்ணங்களின் ஓசையை கேட்டு இருக்கீர்களா? உங்களுக்கு பிடித்த வண்ணத்தை பார்கையில் ஏற்படும் உணர்வும் பிடித்த இசையை கேட்கையில் ஏற்படும் உணர்வும் ஒன்றா? வெவ்வேறானதா?

 உங்களின் கனவை, நீங்கள் எதுவாக இருக்க விரும்புகிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளுதலும் அத்தகைய நுட்பமான ஒன்றுதானே? உள்ளுணர்வின் மொழியை புரிந்து கொள்ளுதலும் அப்படிப்பட்ட ஒன்றுதானே? அப்படி அதன் கனவை கண்டடைந்து அதை நிஜமாக்க போராடும் வாழ்க்கை எப்படி இருக்கும்?

 அப்படி தனது கனவான wildlife photograph-ல் சிறந்த புகைபடக் கலைஞனாக ஆவதற்காக போராடும் கார்த்திக் என்பவனின் வாழ்க்கையை சொல்லும் படமே "மயக்கம் என்ன".சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் விக்ரமன் பாணி கதை தான்.

 இந்த படத்தின் முதல் பாதி ஒரு அற்புதம்.இரண்டாம் பாதி சிலரின் பொறுமையை கொஞ்சமும் மற்றவரின் பொறுமையை அதிகமும் சோதிக்கும்.

முதல் பாதி..
 கனவும் காதலுமாய் கலந்து செல்கிறது முதல் பாதி.எதை காதல் என்பது? சரியான வரையறை ஏதும் உள்ளதா? வருடக்கணக்காய் ஒரு பெண் பின்னே சுற்றி திரிவதும்,ஒருதலைக் காதல் என்ற பெயரில் உயிரை விடுவதும் கூட காதல் இல்லாமல் வெறும் பருவக் கோளாறாய் இருக்கலாம்.அதற்கு நேரெதிராய் வெளியில் காட்டிக் கொள்ளாமல்,சொல்ல படாமல் எத்தனையோ உண்மை காதல் இருக்கும்.

 சொல்லப்படாததும் சொல்ல தேவையற்றதுமே உண்மைக் காதல்.புரிதலின் மொழியில் பேசிக் கொள்ளும் மனங்களின் காதல் அது.அப்படி ஒரு காதல் இந்த படத்தின் முதல் பாதியில் வருகிறது.

 பார்த்த நொடியில் உங்களுக்கு பிடித்துவிடக் கூடிய பெண் உங்கள் நண்பனின் காதலியாக அறிமுகமானால் எப்படி இருக்கும் அப்படி தான் ஆரம்பிக்கிறது இப்படம் .பின் அப்படிப்பட்ட காதலின் முரண்களையும்,கனவை நிஜமாக்க போராடுகையில் நிகழும் வாழ்வின் முரண்களையும் சேர்த்து அற்புதமான அனுபவமாக ஆக்கியிருக்கிறார் செல்வா(செல்வராகவன்).

இரண்டாம் பாதி..
 படத்தின் இரண்டாம் பாதி வெற்றிக்காக போராடுபவனின் கதையிலிருந்து மெல்ல நழுவி பின் ஆணின் வெற்றிக்கு பின்னால் முழுக் காரணமாய் இருக்கும் பெண்ணை பற்றிய கதையாக மாறுகிறது.

 இந்த படத்தை நாலு சண்டை,காமடி ட்ராக் என வழக்கமாய் எடுக்க முடியாது தான் என்றாலும்.. வாரணம் ஆயிரம் படத்தில் கெளதம் மேனன் ஒரு தகப்பன்-மகன் வாழ்வை தொய்வின்றியும், ஒரு சாதாரணன் இந்தியாவிலேயே பெரிய தொழிலதிபர் ஆவதை மணி ரத்னம் குரு திரைபடத்தில் சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்க.. இதில் சற்று சறுக்கியிருக்கிறார் செல்வா.

இரண்டாம் பாதி கதை கொஞ்சம் தாவி தாவி செல்கிறது.எதை நோக்கி போகிறது என சிறு குழப்பம் வருகிறது படத்துடன் ஒன்றுவதற்கு நேரம் பிடிக்கிறது.

 அந்த இடைவேளை காட்சி ஒரு கவிதை.அக்காட்சியுடன் சரியாய் பொருந்தும் இசை(தீம் மியுசிக்),ஒளி,நடிப்பு என எல்லாம் சேர்ந்து க்ளாஸ்.இடைவேளை அடுத்து வரும் சில காட்சிகளும் மிக சுவாரஸ்யம்.அதில் வசனமில்லாத காட்சி எத்தனை அழுத்தமாய் இருக்கும் என்பதை அழுத்தமாய் நிரூபிக்கிறார் செல்வா.

 செல்வாவை பற்றி சொல்ல வேண்டும்.யதார்த்தத்தை ஆழமாய் உணர்த்துகிறார் அதே வேளையில் நம்ப முடியாத அதிக பரிச்சயமில்லாத சூழலையும் காட்டுகிறார்.

 இதில் கூட ஐந்து நண்பர்கள் ஆண்கள் முவர்,பெண்கள் இருவர் எப்போதும் ஒரு நண்பனின் வீட்டிலேயே இருக்கிறார்கள்.ஒரே அறையில் ஒன்றாய் தூங்குகிறார்கள் அவர்களுடன் நண்பனாய் பழகும் ஓர் அப்பா.செல்வா அவரை ட்ரிம் அப்பா என குறிப்பிடுகிறார்.இதே போல் இன்னும் பல இருக்கின்றன.

 சண்டை போடும் நண்பர்களை அந்த அப்பா சமாதனம் செய்து வைக்கும் காட்சி அட போடவைக்கும் ரகம்.காதலை உறுதி செய்துகொள்ள செல்வா சொல்லியிருக்கும் டெக்னிக்கும் 'அட'.

நாயகியிடம் நாயகன் அறை வாங்குவதை அப்பட்டமாய் காட்டுகிறார் ஆனால் ஒரு ஆண் பெண்ணை அடிக்கும் காட்சியில் அதை திரையில் காட்டாமல் சத்தத்தை மட்டும் கேட்க வைக்கிறார்.

யாமினி..
 கூந்தலை காற்றில் பறக்க விட்டபடி முப்பத்தி இரண்டு பற்களும் தெரியும்படி சிரித்துக் கொண்டே திரும்பி அறிமுகமாகும் வழக்கமான நாயகி இல்லை.படம் ஆரம்பித்து இருபது நிமிடம் கழித்து தான் முதன்முதலாய் புன்னகைக்கிறார்.அதுவரை முறைப்பு தான்.

 செல்வாவின் அனைத்து கதாநாயகிகள் போல் இவருக்கும் சர்வ சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.அவரது அப்பா அம்மா பற்றி சொல்லவேயில்லை விருப்பப்படி சுற்றுகிறார்.நாயகனை கை நீட்டி அடிக்கிறார்.மிக தன்னம்பிக்கையுடன் இருக்கிறார் போராடுகிறார்.செல்வா வார்த்தையில் சொன்னால் இரும்பு மனுஷி.

ஹிரோ..
 படத்தின் நிஜ ஹிரோ ராம்ஜி.நாயகன் ஒரு போட்டோகிராபர் என்பதால் அவன் படமெடுக்கும் காட்சிகளும் அவனது பார்வையில் காட்டப்படும் காட்சிகளும் சிறப்பாய் அமைந்தால் தான் அவனது திறமையாக நாம் அதை உணர முடியும்.அதன் பின்பே அவன் மீது நமக்கு மரியாதையும் அவன் வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணமும் எழும்.படத்தில் ஒரு பாத்திரமாகவே மாறிவிட்ட ஒளிப்பதிவை மிக மிக சிறப்பாய் செய்திருக்கிறார் ராம்ஜி.

 நாயகன் காட்டில் படமெடுக்கும் அந்த பத்து நிமிட காட்சிகளுக்காகவே படத்தை பார்க்கலாம்.அதில் ராம்ஜியின் உழைப்பு வார்த்தைகளில் விளக்க முடியாதவை.

தனுஷ்..
 தனுஷ் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.கார்த்திக் என்பவனை நிஜமாய் திரையில் உளவ விட்டிருக்கிறார்.க்ளைமாக்ஸில் கொஞ்சம் அடக்கி வாசித்து இருக்கிறார்.எனினும் கண்களால் பேசும் இறுதி ஷாட் ஷார்ப்.

 படத்தில் மிக சிறப்பாய் நடித்திருக்கும் மற்ற கதாபாத்திரங்கள்,இசை,எடிட்டிங்,பாடல் படமாக்கப்பட்ட விதம்,அங்கங்கே எட்டிப் பார்க்கும் சினிமாத்தனம் எல்லாவற்றையும் வண்ணத்திரையில் காண்க.

 கமர்சியல் விஷயங்களை தள்ளி வைத்து விட்டு படத்தில் என்னதான் இருக்கிறது என்று பார்க்க நினைப்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்.

படம் முடிந்து என்ட் டைட்டில் ஓடி முடியும் வரை காத்திருந்து கடைசியாய் வெளிவரும் சினிமா காதலர்கள் தவற விடக்கூடாத படம்.

நான் இரண்டாம் முறை பார்க்க போகிறேன்.

Wednesday, November 23, 2011

'முதல் சிறுகதை'

ஒரு எழுத்தாளன் உருவாகுறது எவ்வளவு கடினம்னு அவன் உபயோகிக்கும் பேனாவுக்கும் காகிதத்திற்கும் தான் தெரியும்.

இங்க கூட ஒருத்தர் சிறுகதை எழுத்தாளராக மன்னிக்க ஆகச்சிறந்த சிறுகதை எழுத்தாளராக தலைகீழாய் நின்னு தண்ணி குடிச்சிட்டு இருக்கார்..

றை முழுக்க கசக்கி எறியப்பட்ட காகிதத்துக்கு இடையில் ஒரு மூலையில் அமர்ந்து காகிதத்தை கசக்கி தூக்கி போட்டுட்டு இருக்கார்..ச்சே சிறுகதை எழுதிட்டு இருக்கார்.

சில வரிகள் எழுதிப்பார்த்து பிடிக்காட்டி கசக்கி தூக்கி போட்டுடுவார்.சில சமயம் எதுவுமே தோணாமல் வெற்று காகிதத்தை கசக்கி தூக்கி போடுவார் இன்னும் சில முறை நல்லா எழுதியிருந்தும் பிடிச்சிருந்தும் பழக்க தோஷத்துல கசக்கி வீசிடுவார்.அப்புறம் சுதாரித்து காகித குப்பையிடையில் ஒவ்வொண்ணா எடுத்து பார்த்து அதை தேடி எடுப்பார்.அப்புறம் இது தானா நமக்கு பிடிச்சதுன்னு குழப்பம் வந்து அதையும் கசக்கி தூக்கி போட்டுடுவார்..

ப்படி இவர் காகிதத்தை கசக்கி மூளையை கசக்கி யோசிக்கிறதுக்கு பின்னாடி பெரிய லட்சியமே இருக்கு..

எப்படியாவது தன்னோட சிறுகதையை ஆனந்த விகடனுக்கு அனுப்பி அது முத்திரை கதையாக நட்சத்திர எழுத்தாளர் கதையாக இன்ன பிற அங்கீகாரம் எல்லாம் முதல் கதையிலேயே அடையணும் எப்படியாவது சிறந்த சிறுகதை எழுத்தாளருக்கான ஆஸ்கர் விருதை வாங்கி தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்க்கணும்..என்னது சிறுகதை எழுத்தாளருக்கெல்லாம் ஆஸ்கர் கிடையாதா ?! இதையெல்லாம் சொல்லி அவர் ஆஸ்கார் ஆசையில் லாரி ஏத்திடாதீங்க.

ஏன்னா இதுக்காக அவர் வெட்கம் மானம் சூடு சொரணை எல்லாத்தையும் விட்டுட்டு ஒரு எண்பத்தி ஐந்து வயசு கிழவி பின்னாடி சுத்தியிருக்கார்.ச்சீ ச்சீ தப்பா நினைக்காதீங்க,அது ஒரு வாழைப்பழம் விற்கிற கிழவி.அதை பாலோ பண்ணி வாட்ச் பண்ணி அப்சர்வ் பண்ணி ஒரு எதார்த்தமான சோகமான 'பழ'ங்கதை எழுதலாம்னு ஒரு நல்ல எண்ணத்தில் தான்.

ப்படி இப்படின்னு ஒரு பழக்காரியின் கதைன்னு தலைப்பிட்டு ஒரு கதை எழுதியும் முடிச்சார்.அந்த கதை அழுகிடாம இருக்க ப்ரிட்ஜில் வச்சு பாதுகாத்தார்.திரும்ப திரும்ப படிச்சு பார்த்து இதை அனுப்பிடலாம்னு முடிவெடுத்திருந்த வேளையில் அந்த கிழவிக்கிட்ட போய் பத்து ரூபாய்க்கு அஞ்சு பழம் கேட்டார்,அந்த கிழவியோ நாலு பழம் தான் தரமுடியும்னு சொல்லிடுச்சு..

இதை கேட்டு கடுப்பாகி ஒரு எழுத்தாளனுக்கே உரிய கோபத்தில் ரெண்டு வார்த்தை காட்டமா பேசிட்டார்.அதைக்கேட்டு அந்த வாயில் பல் இல்லாத கிழவி நாக்கு மேல பல்லை போட்டு அசிங்க அசிங்கமா திட்டிடுச்சு.பதிலுக்கு இவரு கிழிகிழின்னு கிழிச்சிட்டார் வேறெதை சிறுகதை எழுதின பேப்பரை தான்.அந்த கிழவிய ஒண்ணும் பண்ண முடியலை.

கேவலம் ஒரு பழத்துக்காக வரலாற்றில் இடம் பெரும் வாய்பை அந்த பாட்டி இழந்திடுச்சேன்னு இவருக்கும் ஏகப்பட்ட வருத்தம்.

ந்த வாழைப்பழத்துல வழுக்கி விழுந்தது மட்டுமில்லை சிறுகதைக்கான சிந்தனையில் அடுத்தடுத்து அவருக்கு தான் எத்தனை போராட்டம் பிரச்சனை..

வானத்தை பார்த்தபடி கதை யோசிச்சுகிட்டே போய் தெருவில் படுத்திருந்த நாயை மிதிச்சு அது அவரை ஓட ஓட துரத்தினது..எதையோ யோசிச்சபடி போய் குழிக்குள்ள குப்புற விழுந்தது,தந்தி கம்பத்துல மோதினது,கண்தெரியாத பெருசுகளை இடிச்சு தள்ளினது,புதுசா சைக்கிள் ஓட்ட கத்துக்கும் சிறுசுகளை சைக்கிளோட கவுத்தது,நடந்தபடியே போய் குளத்துல விழுந்தது இதுக்கெல்லாம் மேல தன் வீட்டுக்கு பதிலா அடுத்த வீட்டுக்குள்ள புகுந்து கலவரத்தை உண்டாக்கினது.. எத்தனை எத்தனை..

ல்லா தடைகளும் தாண்டி லட்சிய வெறி குறையாம ஒரு சிறுகதையும் யோசிச்சுட்டார்.அந்த நொடியில் அவருக்கு கையும் ஓடலை,காலும் ஓடலை,பறவை பறக்கலை,மரம் அசையலை,கடிகாரம் நகரலை,பூமி சுத்தலை,தலையும் புரியலை காலும் புரியலை.கலர் கலரா ஸ்கெட்ச்பென் வாங்கி பார்டர் எல்லாம் போட்டு கதையை அப்படியே பேப்பரில் எழுதினார் இல்லையில்லை வரைஞ்சார்.

புதுசட்டை போட்டுக்கிட்டு குலசாமியை வேண்டிக்கிட்டு போஸ்ட் ஆபிஸ் புறப்பட்டார்.ஒரு எழுத்தாளனாவே நடந்தார்,கவர் வாங்கினார்,ஸ்டாம்ப் வாங்கினார்.திரும்ப ஒருமுறை உலகத்தில் உள்ள எல்லா சாமியையும் மதவேறுபாடு இல்லாமல் வேண்டிக்கிட்டு பதட்டத்தை காட்டிக்காம,கதையை கவரில் போட்டு விலாசம் எழுதி ஸ்டாம்ப் ஒட்டி தபால் பெட்டியில் போட்டார்.நல்லவேளை அவர் முழுக்கையையும் சிரமப்பட்டு பெட்டி உள்ள விட்டு கவரை பத்திரமா பெட்டியின் அடியில் சேர்த்ததை யாரும் பார்க்கலை இல்லேன்னா சந்தேக கேஸில் பிடிச்சிட்டு போயிருப்பாங்க.

அப்புறம் எழுத்தாளன்ற தோரனையிலேயே நடந்து வந்தார்.அதை யாரும் கவனிக்கலைன்றதை அவரும் கவனிக்கலை.ராத்திரி முழுக்க தூக்கம் வரலை கட்டிலில் புரண்டார்,கனவுல மிதந்தார் எப்ப தூங்கினோம்ன்னு தெரியாமலேயே தூங்கிப் போனார்.

பொழுதுவிடிஞ்சு வெயில் வந்தது தெரியாம தூங்கிட்டு இருந்தார். சார் போஸ்ட்ன்னு ஒரு சத்தம் அசரீரி மாதிரி அவர் காதில் விழுந்துது.அவருக்கு தெரியாமலேயே அவர் உடல் துள்ளி குதிச்சு நின்னுது.எங்கிருந்து லெட்டர்ன்னு அவர் வாய் தானாவே கேட்டுது.ஆனந்த விகடன்லேர்ந்து சார்ன்னு பதில் வரவும் கார்டூன்ல ஜெர்ரிய பார்த்த டாம் மாதிரி வாசலுக்கு பாஞ்சு ஓடினார்.அவர் முகம் கூட நாக்கை தொங்கப்போட்டுக்கிட்டு இருக்கும் டாம் பூனை மாதிரி தான் இருந்தது.அதை பார்த்து மிரண்ட தபால்காரர் சீக்கிரம் லெட்டரை குடித்துட்டு எஸ் ஆனார்.

னக்கு பொறந்த முதல் குழந்தையை கையில் ஏந்தும் தகப்பனின் பரவசத்தோட அந்த லெட்டரை ஏந்தி பார்த்த அவர் முகத்தில் பத்து சுனாமி,இருபது பூகம்பத்தை ஒண்ணா பார்த்த அதிர்ச்சி......

ஏன்னா அந்த கவரை அவர் ஏற்கனவே பார்த்திருக்கார்,அந்த கையெழுத்தையும் தான்.ஆர்வக் கோளாறு கூடிப்போய் ஃப்ரம் அட்ரெஸ்ஸில் விகடன் அட்ரெஸ்சையும் டூ அட்ரெஸ்ஸில் தன் வீட்டு அட்ரெஸ்சையும் எழுதிவிட்டதும் அதனால அவர் அனுப்பின லெட்டர் அவருக்கே வந்ததும் தான் அந்த அதிர்ச்சி ரியாக்சனுக்கு காரணம்.

முகத்தில் தெரிந்த பத்து சுனாமி,இருபது பூகம்ப அதிர்ச்சியை மறைச்சுக்கிட்டு தெருவின் இரண்டு பக்கமும் பார்த்தார்.நல்லவேளை யாரும் இல்லை..

ஆனா அப்புறம் தான் அதை அவரே கவனிச்சார்.அவரின் எதிரேயே முன்பு அவர் தெரியாமல் மிதிக்க போய் ஓட ஓட விரட்டின நாய் நின்னுக்கிட்டு அவரையே முறைச்சு பார்த்தபடி இருந்துது.. இதுக்கு தானாடா எல்லா அளப்பரையுங்கிற மாதிரி.

Saturday, November 19, 2011

தொடங்கட்டும் இசை... Start Music...

தைரியம்ங்கிறது என்னனா பயம் இல்லாத மாதிரி நடிக்கிறது.. நான் எனக்கு சொல்லிகிட்டேன் நீங்க தைரியமா படிங்க.

பயத்ததை தூக்கிப்போட்டு பதிவை துவங்குறேன்.. முதலில் எனக்கு என்ன தெரியும்ன்றதை சொல்லிடறேன். எனக்கு தமிழ் இலக்கணம்,எழுத்துப்பிழை இல்லாமல் எழுதறது,வரலாறு,புவியியல்,சமூக அறிவியல்,கணிதம் வரை எதுவும் சரியா தெரியாதுன்றது தெரியும் ஹிஹி.

அச்சச்சோ உங்களை எல்லாம் வரவேற்க மறந்துட்டேன்,மன்னிச்சூ... என் இனிய தமிழ் மக்களே
டிவிட்டரில் கீச்சராய் 140 எழுத்துகளில் மொக்கை போட்டு பறந்து கொண்டிருந்த நான்,நீங்கள் தந்த ஆதரவிலும் உற்சாகத்திலும் (அங்க கழுவி கழுவி ஊத்தினது யாருக்கு தெரிய போகுது)வலைதளத்தில் கால் பதிக்க வந்திருக்கிறேன்.

140 எழுதுக்களுக்கே நொண்டி அடித்துக்கொண்டிருந்த நான் இந்த பரந்து விரிந்த வானில் என்ன பண்ண போறேன்னு எனக்கே தெரியலை.. இதுக்கு மேல இதே ஃப்ளோவில் எழுதவும் முடியலை.

இருந்தாலும் எப்படியோ முதல் பதிவிற்கு இத்தனை வரிகள் தேத்திட்டேன்..அதே போல் அப்பப்போ எதாவது பதிவையும் தேத்திடுவேன்.

நீங்களும் உங்க இஷ்ட தெய்வத்தை நாத்திகவாதிகள் இஷ்டமில்லா தெய்வத்தை வேண்டிகிட்டு அப்பப்போ வந்து பதிவை படித்து உங்க திட்டு குட்டு பாராட்டு சீராட்டு எல்லாம் சொல்லிட்டு போனீங்கனா வேறென்ன நான் மகிழ்ச்சி அடைவேன்.

நிற்க.. "ஆமாம் நான் இப்போ எங்கே இருக்கேன்னு " யாருக்காவது சந்தேகம் வருதா -வெரி குட் கையை குடுங்க நீங்க என் முதல் ரசிகர் ஆகிட்டீங்க.வாழ்த்துகள்..

நின்றவர்கள் உட்காருங்க.. இத்துடன் எனது உரையை முடிச்சிக்கிறேன்.அடுத்த பதிவு ஒரு சிறுகதை.. தலைப்பு "முதல் சிறுகதை" எப்புடி !! பின்குறிப்பு :நான் அதிகம் சினிமா பார்க்க மாட்டேன் அதனால் அதிகம் விமர்சனம் எழுத மாட்டேன் அப்படி எழுதும் போதும் படத்தோட கதையை எழுத மாட்டேன்..

எனது இந்த முதல் பதிவிற்கு முதல் இரண்டு கமென்ட் போடறவங்களுக்கு சிறப்பு பரிசு கொடுப்பதை அறிந்து கமென்ட் செய்த "மீ த ஃபர்ஸ்ட் முத்து"விற்கும் ""மீ த செகன்ட் கிருஷ்ணன்"ற்கும் பரிசு அனுப்பப்படும் !!!

மூன்றாவது கமென்ட் போட்ட "நல்ல மனசுக்காரன்"ற்கு உண்மையிலேயே நல்ல மனசு..

என்னை பேட் வோர்ட்ஸில் திட்டிய நாலாவது கமென்ட் நீக்கப்பட்டது.. ஐந்தாவது கமென்ட் "என் மனசாட்சி" சொல்வதை நீங்களே படிச்சிக்குங்க....

-அவ்வ்வ்வ்வ் சும்மா டமாசு கோவிச்சிக்காதீங்க..போகும் போது முன்னூறு ரூபாய்க்கு மறக்காம மொய் செஞ்சிடுங்க.. அதான் கமென்ட் மறக்காம எழுதுங்க.

நன்றி.