Monday, December 5, 2011

தி டர்டி பிக்சர் - ' சில்க் ' தி குயின்



தி டர்டி பிக்சர் ஸ்டில்ஸ் பார்த்து வித்யா பாலனா இப்படி என ஷாக் ஆனவர்களில் நானும் ஒருவன்.எப்படியும் இந்த படமெல்லாம் நம்மூரில் வராது படத்தின் முக்கிய காட்சிகளை மட்டும் வழக்கம் போல் நெட்டில் டவுன்லோட் செய்து பார்த்து பொது அறிவை வளர்த்துக்க வேண்டியதுதான்னு நினைச்சேன் !

  ஆனால் எங்க ஊரிலும் இந்த படம் வந்திருப்பதை பார்த்து ஆச்சர்யப்பட்டுபோனேன் .இந்த படத்திற்கு செல்லலாமா வேண்டாமா என யோசித்தபடியே சென்று கொண்டிருந்தேன்.பஸ் வேறு முதல் நிறுத்தத்துடன் வேறு பக்கம் திரும்பிவிட்டது,நம் கலைதாகத்துக்கு எத்தனை தடைகள் என நொந்த படி இறங்கி வேகமாக நடந்தேன்..ஷோவுக்கு நேரமாச்சே..

 டிக்கெட் கொடுப்பவர் ஹிந்தி படம் சார் என்றார்.'பார்க்க வேண்டிய ஹிந்தி படம் எவ்வளோ இருக்கு 'peepli live' பார்த்தியா நீ' என்றது மனசாட்சி !! அப்போது இன்னொரு குரல் (மனசாட்சி டபுள் ஆக்ட்பா) 'வசனமாடா முக்கியம் படத்த பாரு' என்றது.நல்லவேளையாக படம் ஆரம்பிக்கவில்லை ஆறரை மணி படத்தை ஆறே முக்கால் வரை போடாத ஆப்ரேட்டரின் நேரந்தவறாமையை மனதுக்குள் பாராட்டி இடம் பிடித்து அமர்ந்தேன்.படம் பார்க்க வந்திருந்த முகங்களை எல்லாம் பார்த்தேன் ஒண்ணும் ஹிந்தி தெரிஞ்ச மூஞ்சி மாதிரி தெரியலை எல்லாம் நம்ம மாதிரி மொழியை தாண்டிய கலை ஆர்வமிக்கவர்கள் என நினைத்துக் கொண்டேன்.

 படம் தமிழில் ஓடியது தமிழ் டப்பிங் என்று பின்பு தான் உரைத்தது.வித்யா பாலன் திரையில் வந்ததும் இவரா சில்க் என்ற கேள்வி எழுந்தது.சில்க்கோ டஸ்கி பியூட்டி வித்யாவோ வொயிட்டு ஸ்கின்னு கேளு கேளு.சில்க்கின் போதை ததும்பும் கண்களுக்கு இணையாக யாரும் வர மாட்டார்கள் என்றாலும் வாகை சூட வா இனியா மாதிரி ஒரு பெண் நடித்திருந்தால் கொஞ்சம் பொருத்தமாக இருந்திருக்கும் என தோன்றியது.

 இதெல்லாம் படம் தொடங்கி சில நிமிடங்கள் வரை தான்.அதன் பின் நடிகை ஆக ஆசைப்பட்டு வீட்டை விட்டு ஓடி வரும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை நீங்கள் சாட்சியாக பார்க்க துவங்கி விடுவீர்கள்.

  வித்யா பாலன் துவக்கத்தில் ரேஷ்மா என்ற பாத்திரத்தில் தாவணி அணிந்த படி பிராவின் பட்டை தெரிவதை பற்றிய பிரக்ஞை சிறிதும் இன்றி அலட்சியமாய் அலைகிறார்.வெளிப்படையானவள் என்பதன் குறியீடு போலும்.சாட்டையில் அடி வாங்கியபடி ஆடும் காட்சியில் நடிக்க மற்றவர்கள் தயங்க துணிச்சலாய் அதை ஏற்று தன் முதல் வாய்ப்பை பெறுகிறாள்.

 தனக்கென அடையாளம் தேடிக் கொள்ள ஆசைப்படும் ஒவ்வொரு பெண்ணும் கண்ணுக்கு தெரியாத சாட்டை அடிகளை பொறுத்துக் கொண்டுதானே வாழ்கிறார்கள்.விளம்பரங்களில்,வார இதழ்களின் முன் அட்டையில்,நடுப்பக்கத்தில் எதை விற்கிறார்கள் ? பெண்ணின் கவர்ச்சியை தானே.சினிமாவை பற்றி சொல்லவே வேண்டாம்.மாஸ் ஹிரோ, ஹிரோ தான்  எல்லாம் என்பார்கள் அப்படியென்றால் பெண்களே நடிக்காத ஒரு படத்தை எடுக்க வேண்டியதுதானே ? செய்வார்களா ? அப்படி செய்தால் எத்தனை ஆண்கள் அதை பார்ப்பார்கள் ! அவள் அன்றி ஒர் அணுவும் அசையாது.

 ஆண்களால் நிர்மாணிக்கப்பட்ட இந்த உலகத்தில் பெண்ணின் உடலை கவர்ச்சி பொருளாக வியாபாரத்தின் தந்திரமாக மாற்றி வைத்திருக்கும் பொழுது அந்த கவர்ச்சியையே தன் மூல தனமாக,ஆயுதமாக பயன்படுத்தி ஒரு பெண் முன்னேற நினைத்தால் ஆண்கள் நிலைமை என்னாகும்.

 அதை தான் செய்து இந்த படத்தில் ரேஷ்மா என்ற தனி மனுஷி சில்க் என்ற ஸ்டாராக உயர்கிறாள்.தன் முன் வரும் தடைகளை எல்லாம் பார்த்து கண்ணடித்து சிரித்து,செல்லமாக கன்னத்தில் தட்டி மயங்கி விழ செய்து முன்னேறிக் கொண்டே இருக்கிறாள்.

  சாதுர்யமாய் பெண்ணிற்கு ஆண் போட்டிருக்கும் விலங்குகளான கற்பு,அச்சம்,மடம்,நாணம் எல்லாம் உடைத்து விட்டு சுதந்திரமாய் இருக்கும் பெண்ணின் முன் ஆண் என்ற பிம்பம் என்ன செய்து விட முடியும்.சில்க் அப்படி தான் இருக்கிறாள்.

 நீங்கள் கவர்ச்சியை ரசிக்க வேண்டும் என நினைத்தால் இந்த படத்தின் காட்சிகளை மட்டும் டவுன்லோட் செய்துபார்த்து மகிழ்ந்து கொள்ளுங்கள்.ஏனெனில் அசைவம் விரும்பி சாப்பிடுபவர்க்கு கூட திடிரென கசாப்பு கடையில் இருக்கும் இறைச்சியை பார்த்து இதையா நாம் உண்கிறோம் என குற்ற உணர்வு தோன்றுமல்லவா அப்படிபட்ட உணர்வு தான் இருக்கிறது இந்த படத்தில் சில்க் கவர்ச்சியாய் தோன்றும் போதெல்லாம்.

 படம் முழுதும் வித்யா பாலன் முக்கால் மார்பு தெரியும்படி தான் அலைகிறார் எனினும் அவரை சில்க் என்ற மனுஷியாக பார்க்க ஆரம்பித்த பிறகு அதையெல்லாம் சபலப் பார்வை பார்க்க முடியவில்லை.வித்யா பாலனை ராட்சஷி என்று தான் சொல்ல வேண்டும் அப்படி ஒரு நடிப்பு.படம் முழுதும் வித்யாவின் ராஜாங்கம் தான் இல்லையில்லை அராஜகம் தான்.



 வித்யா பாலனின் அநாயாசமான சிரிப்பாகட்டும்,கிறக்கமாய் ஒற்றை கண்ணை சிமிட்டுதல் ஆகட்டும்,அலட்சியமாக சிகரெட் பிடிப்பதாகட்டும் எல்லாம் அத்தனை கட்சிதம்.தனக்கு எதிராக போராட்டம் செய்பவர்கள் பார்த்து அவர் பிளையிங் கிஸ் தரும் ஷாட் செம செம.

 சில்க்கை அசிங்கம்,ஆபாசம் என வர்ணித்து விட்டு கள்ளத்தனாமாய் அவளை ரசிப்பவர்கள் பற்றி அவள் பேசும் அந்த இடைவேளை காட்சி பளார் பளார் பளார்.இத்தனை திமிரான போராட்ட குணமுள்ள ஆளுமைமிக்க  தனித்தன்மையான பெண் பாத்திரம் இந்திய சினிமாவில் இதற்கு முன் வந்ததே இல்லை என சொல்லலாம்.

 சில்க் என்ற மனுஷியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் தான் படம்.எல்லா ஆண்களின் தூக்கத்தை கெடுத்த அவள் வாழ்க்கை எப்படி இருந்தது என இப்படம் சொல்கிறது.வெளியில் தெரியாமல் அவளை காதலிக்கும் ஆப்ரகாம் என்பவன் கூட வெளியில் அவளை திட்டி விமர்சித்த படியே உள்ளுக்குள் அவளை காதலிக்கிறான் அதனால் தான் என்னவோ அவன் படம் முழுதும் கருப்பு உடையில் வருகிறான்.

 நஸ்ருதீன் ஷா இம்ரான் ஹஸ்மி மற்ற அனைவருமே இந்த படத்தில்   சிறப்பாய் நடித்திருக்கிறார்கள்.நல்ல சிறப்பான டெக்னிக்கல் டிமும் அமைத்திருக்கிறது.ஹிந்தி தெரியாதவர்கள் படத்தை தமிழிலேயே பாருங்கள் வசனங்கள் அத்தனையும் செம ஷார்ப்.படத்தின் பலமே வித்யா பாலன் மற்றும் வசனம் தான்.

 ஆரம்பத்தில் அந்த தமிழ் டப்பிங் கொஞ்சம் படுத்துகிறது போக போக பழகி விடுகிறது.இத்தனை செய்தவர்கள் தமிழ் நாட்டை கொஞ்சம் அசலாக காட்டியிருக்கலாம்.படத்தில் காட்டப்படும் தமிழ் நாடும்,தமிழ் முகங்களும் செயற்கையாய் இருக்கிறது.படம் முழதும் அங்கங்கே விபூதி பூசிய முகங்கள் தென்படுகிறது தமிழர்கலாம் ஏனோ ஒட்டாமல் தனியே தெரிகிறது.

 நேரடியான ஹிந்தி படம் அதிகம் பார்த்த அனுபவமில்லாதவர்களுக்கு இந்த படத்தின் நடிப்பு வசன உச்சரிப்பு எல்லாம் கொஞ்சம் வித்யாசமாக தெரிய வாய்ப்புண்டு.நிச்சயமாக படம் போரடிக்காமல் செல்லும் என்பது உறுதி.

 இந்த படத்தின் பல விஷயங்களை சொல்ல எனக்கு விருப்பமில்லை அதையெல்லாம் நீங்கள் திரையில் பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

 ராம் கோபால் வர்மா ஒரு முறை ஒரு பேட்டியில் இப்படி கேட்டார் 'உங்களை தனியே ஒரு அறையில் வைத்து பூட்டி ஒரு ஆக்ஷன் படம்,ஒரு செக்ஸ் படம் சிடிக்களை தந்தால் எதை முதலில் பார்ப்பீர்கள்' என்று.நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள் சொல்லுங்கள் ? அப்படிப்பட்ட நம் மனதின் மறைக்கப்பட்ட கள்ளதனத்தின் நிழல் உருவமே சில்க் கதாபாத்திரம் அந்த பாத்திரம் வெறும் ஒரு பெண்ணை குறிப்பது அல்ல.அதனால் தான் எல்லோரும் அவளை ரசித்தார்கள் வெளியில் காட்டி கொள்ளாமலேயே.அதுவே அவளது வளர்ச்சியாகவும் வீழ்ச்சியாகவும் ஆனது.

 ஆண் கதாபாத்திரம் என்றால் எப்படி ஒரு தேவதாஸோ அப்படி பெண் பாத்திரத்திற்கு ஒரு சில்க்.இந்த படம் மீண்டும் மீண்டும் ரீமேக் செய்யப்படும் என்பது என் துணிபு.முப்பது வருடம் கழித்து இந்த படம் ரீமேக் செய்யப்படும் போது நாம் இந்த படத்தை பார்த்த நினைவுகளை அசைபோட்டு கொண்டிருப்போம்.வித்யா பாலன் முகமும் அதன் பின்னே நிஜ சில்க்கின் முகமும் நம் முன்னே நிழலாடும்.

 சில்க்கின் வாழ்க்கையை மேலோட்டமாக எடுத்துக் கொண்டு கற்பனையாக எடுக்கப்பட்ட படம் என்றாலும் படம் முடிகையில் நமக்கு எழும் வருத்தமும் கண்களில் எட்டி பார்க்கும் சில கண்ணீர் துளிகளும் நிஜ சில்க்கிற்கே அர்ப்பணம்.

 "நீ பொறக்கலைனா இப்படி கூட ஒரு பொண்ணால இருக்க முடியும்னு யாருக்கும் தெரியாமலே போயிருக்கும்" படத்தின் வரும் ஒரு வசனம்.இன்னொரு வசனம் "தோத்தா என்ன போட்டி சுவாரஸ்யமா இருந்துதில்ல ஜெயிச்சாலும் தோத்தாலும் சந்தோசம் மட்டுமே தருவா இந்த சில்க்"

 தோற்றால் என்ன ராஜியத்தை இழந்தால் என்ன ராணி ராணி தானே.இந்த சில்க்கும் ஒரு ராணி தான்.

 நட்சத்திர கலை நிகழ்ச்சி என்ற பெயரில் ஆபாச குலுக்கல் நடனங்களை குடும்பத்துடன் சேட்டிலைட் சேனலில் பார்க்க பழகிவிட்ட நாம் ஒரு கவர்ச்சி நடிகையின் வாழ்க்கையை சரியான கண்ணோட்டத்தில் பார்க்க துணிவோமா ? ஒரு பெண் பற்றிய இந்த படத்தை நம்மூரில் எத்தனை பெண்கள் பார்ப்பார்கள் ? பார்க்க துணிவார்கள் ? தெரியவில்லை...

என்னை பொறுத்தவரை தி டர்டி பிக்சர் - தி பெர்ஃபக்ட் பிக்சர் 


11 comments:

  1. நல்லா எழுதியிருக்கீங்க... சில்க் ரோலில் வித்யா பாலன் என்று கேள்விப்பட்டதுமே நானும் கூட இப்படித்தான் நினைத்தேன்... குறிப்பாக சிலுக்கின் சொருகிய கண்களும், கொஞ்சல் பேச்சும் அற்புதமானவை... அவற்றை வித்யா பாலனிடம் எதிர்பார்க்க முடியாதென்பது என் எண்ணம்...

    நான் இன்னும் படம் பார்க்கவில்லை... பார்த்தாள் என் எண்ணம் மாறலாம்...

    ReplyDelete
  2. // ஒரு பெண் பற்றிய இந்த படத்தை நம்மூரில் எத்தனை பெண்கள் பார்ப்பார்கள் ? பார்க்க துணிவார்கள் ? //

    ஹி... ஹி... அப்படியே இது தமிழர்களோட பெருமை... ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் பார்த்தே ஆகவேண்டும்... பார்க்காதவர்கள் தமிழனே இல்லைன்னு சொல்லியிருக்கலாம்...

    ReplyDelete
  3. அருமையான பதிவு... விடாப்பிடியா இதுக்கு ஒரு பதிவு எழுதுவேன்னு சொல்லும் போதே நெனச்சேன்,இப்படிப்பட்டதாக தான் இருக்கும் என்று... அதையும் தாண்டி அழுத்தமாக அறைகிறது உங்கள் பதிவு. ஆரம்பத்தில் படம் பார்க்காதவனின் கோணத்தையும், அதன் பின் படம் பார்த்த உங்கள் அனுபவத்தையும், அழகான நடையில் சொல்லியிருக்கிறீர்கள். சூப்பர் நண்பா! படம் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. (சைவம் தான்)...

    ReplyDelete
  4. அருமையான விமர்சனம். படத்தின் நிறை குறைகளை பொறுப்புடன் அலசி எழுதி இருக்கிறீர்கள. நீங்கள் கேட்டிருக்கும் கேள்வி நியாயமானது. எத்தனை பெண்கள் இதை பார்ப்பார்கள் என்று தெரியாது. எனக்கு இதுவரை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எழவில்லை. இப்பொழுது பார்க்கலாம் என்று தோன்றுகிறது. தீயேட்டரில் எத்தனை பெண்கள் வந்திருந்தார்கள் என்று நீங்கள் கவனித்தீர்களா? அதை பற்றி மென்ஷன் பன்னவில்லையே. நல்லப் பதிவு!
    amas32

    ReplyDelete
  5. reallly it takes guts to act in a movie lik this.. kudos to vidya balan she rocks the entire movie

    ReplyDelete
  6. >>வித்யா பாலனை ராட்சஷி என்று தான் சொல்ல வேண்டும்

    azakaana raatsashi

    good review

    ReplyDelete
  7. என்ன தான் பருத்திப் புடவையில் பட்டுப்பூச்சி விட்டாலும், பட்டாம்பூச்சி விட்டாலும், அது பட்டுப் புடவை ஆகாது..

    பருத்தி பருத்தி தான், 'சிலுக்கு' சிலுக்கு தான்..

    டர்டி பிக்சர்- மன அழுக்கற்றவர்களுக்கு மட்டும்

    ReplyDelete
  8. பாஸ்,
    நல்ல எழுத்து நடை.....அனந்த விகடன்ல "வட்டியும் முதலும்" என்று ஒரு கட்டுரை வரும்...அதுல ஒருத்தர் அற்புதமா எழுதுவாரு..,எனக்கு அந்த எழுத்து நடை ரொம்ப பிடிக்கும்...நீங்களும் அதே போல எழுதிருக்கீங்க ...பிரேக் எடுக்காம படிச்சேன்.....அடிக்கடி எழுதுங்க.....
    ஒரே பீலிங் பாஸ்..பதிவ படிச்சா அப்புறம்...

    ReplyDelete
  9. //அலட்சியமாக சிகரெட் பிடிப்பதாகட்டும் எல்லாம் அத்தனை கட்சிதம்.//
    கட்சி-தம்

    ReplyDelete
  10. உங்க விமர்சனம் படிச்சிட்டுத் தான் படம் பார்க்கனும்ன்னு தோனுச்சு - பார்த்தேன், ரசித்தேன்
    - நிக்கற பஸ்ஸில ஓடிபோயி எதுக்கு ஏறனும் - நல்ல வசனம்

    மார்க்கெட் இழந்த (கவர்ச்சி) நடிகைகளின் நிலை...
    - உண்மை

    ReplyDelete