செய்திதாள்களில் பத்தோடு பதினொன்றாய்,பெட்டி செய்தியாய் எத்தனையோ குற்றங்களை வெறும் வாசகங்களாக வாசித்து விட்டு கடந்து விடுகிறோம்.இன்னார் பாதிக்கப்பட்டவர் இன்னார் குற்றவாளி என செய்திகள் சொல்லும் முடிவினை ஏற்று 'லோகத்துல என்னலாமோ நடக்கிறது..'' என சொல்லிக் கொண்டு 'எல்லாம் கலிகாலம்' என்ற ஒற்றை வார்த்தையில் அவரவர் வேலையை பார்க்க சென்றுவிடுகிறோம் .உண்மையில் உண்மை என்ன என்பதை அறிய அக்குற்றங்களை ஆராய்ந்தால் உண்மை என்னவாய் இருக்கும்? உண்மைக்கு ஒரு குணமுண்டு அது வலிமிகுந்ததாய்,நம்ப முடியாததாய், முகத்தில் அறைவதாய் இருக்கும்.அப்படி ஒரு குற்றத்திற்கு பின்னான உண்மையை முகத்தில் அறைந்தார் போல் சொல்லும் படம் "வழக்கு எண் 18/9"
ஜோதி என்ற பெண் யாரோ ஒருவரால் முகத்தில் ஆசிட் அடிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்,போலிஸ் விசாரணை தொடங்குகிறது.. அதை செய்தது யார்? ஏன் செய்தார்? அவருக்கு தண்டனை கிடைத்ததா? என்ன ஆனது? என்பதே படத்தின் கதை.பதின்வயதை சேர்ந்த வேலு,ஜோதி மற்றும் தினேஷ்,ஆர்த்தி ஆகியோர்களின் இடையே நடக்கும் சம்பவங்களாக விரிகிறது திரைக்கதை.
நான் சற்று தாமதமாகத்தான் படத்திற்கு சென்றேன்.அரங்கினுள் செல்கையில் டாக்குமென்டரி போல் ஏதோ ஒன்று ஓடிக்கொண்டிருந்தது நியூஸ் ரீலோ என்று கூட சந்தேகிக்க தோன்றியது ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்த ஒரே சிறுவன்,குடும்ப கடனை அடைக்க தூர தேசத்திற்கு கொத்தடிமையாய் செல்வதை விவரிக்கும் காட்சிகள் அது.அதன் பின் அவன் சென்னையின் ஒரு தெருவில் தனக்கென ஒரு வாழ்வை தேடிக் கொள்வதை சொல்லும் அடுத்த பகுதி வேறு பாணியில் எடுக்கபட்டிருக்கிறது.திரைப்படத்தின் எந்த இலக்கணத்தையும் பின்பற்றாத இலக்கணமாக டிஜிட்டல் கேமராவின் சாத்தியங்களை பயன்படுத்தி தெருவில் நடப்பதை வேடிக்கை பார்ப்பது போல் நம்மை உணரச்செய்கிறது இப்பகுதி.ப்ளாட்களில் வசிக்கும் அப்பர் மிடில்கிளாஸ் மக்களின் வாழ்வை சொல்லும் பகுதி அழகியளுடனும்,நேர்த்தியுடனும் கையாளப்பட்டிருக்கிறது.முடிவில் சாதாரணத்திலிருந்து சிறிது சிறிதாக விரிந்து தன் விஸ்வரூபத்தை காட்டி நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறது இயக்குனர் திரு.பாலாஜி சக்திவேல் மற்றும் அவரது குழுவினர் இப்படைப்பு.
வழக்கமான எந்த தமிழ் சினிமாவின் பாணியிலும் இல்லாமல் இப்படத்தின் திரைக்கதை மெல்ல மெல்ல மண்ணை துளைக்கும் மண்புழுவினை போல் மெதுவாக பயணிக்கிறது கிட்டத்தட்ட இரண்டாம் பாதியின் கால்வாசி வரை.பின் ஆழமில்லை என நினைத்து நடக்கையில் திடிரென எதிர்ப்படும் ஆழத்தில் முழுதும் நம்மை உள்வாங்கிக் கொள்ளும் ஆற்றினை போல் சட்டென ஒரு சமயத்தில் நம்மை முழுதும் உள்வாங்கிக் கொள்கிறது இப்படம்.அதன்பிறகு ஒரு மகா கலைஞனின் ஆன்மாவிலிருந்து படைக்கப்பட்ட ஒரு திரைப்படம் ஒரு பார்வையாளனை என்ன செய்யுமோ அதை சரியாய் செய்கிறது.
ஆரம்பத்தில் மிக மேலோட்டமாகவும் சாதரணமாகவும் தெரிந்தாலும் இத் திரைப்படத்திற்கு(திரைக்கதைக்கும்) பின்னால் இருக்கும் உழைப்பு அத்தனை சாதாரணமானதல்ல.கண்களை திறந்த தியானம் செய்யும் ஞானியின் பார்வையை ஊடுருவது போல் சலனமற்ற ஆழத்தை கொண்ட படமிது.மீண்டும் மீண்டும் இத்திரைப்படத்தை பார்த்தால் மட்டுமே அதை முழுதும் உணர முடியும் .
பிரசன்னாவின் பின்னணி இசை அப்படி ஒன்று இருப்பதே தெரியாமல் இசைந்து நாம் அறியாது உணர்வுகள் மூலம் நம் நெஞ்சை பிசைகிறது.இப்படி தான் எடுக்க வேண்டும் என பிடிவாதம் பிடிக்காமல் விஜய்மில்டனும் தான் ஒரு பிரபல ஒளிப்பதிவாளன் என்பதை மறந்து கதையின் போக்கிற்க்கு ஏற்றவாறு கேமிராவை சுமந்து அலைந்திருக்கிறார்.இவர்களுடன் படத் தொகுப்பாளர் கோபி கிருஷ்ணன் மற்றும் அசலாய் வாழ்ந்திருக்கும் நடிகர்களும் சேர்ந்து இதை ஒரு அற்புத படைப்பாக ஆக்கியிருக்கிறார்கள்.
ஆர்த்தியாக நடித்திருக்கும் மனிஷா அபாரமான நடிப்பினால் அசரடிக்கிறார்.தினேஷாக நடித்திருக்கும் மிதுன் முரளி அழகான பொறுக்கியை சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்கள் மூலம் அப்பட்டமாக கண் முன் நிறுத்துகிறார்.மற்ற பிரதான பாத்திரமாக வேலுவாக நடித்திருக்கும் ஸ்ரீ யும் அவனது நண்பனாக வரும் சிறுவனும் துளிக் கூட நடிக்காமல் நிஜங்களாகவே தெரிகிறார்கள்.இன்ஸ்பெக்டராக வருபவர் எங்காவது நடிப்பார் என பார்த்து ஏமாந்து போனேன்,ஒருவேளை நிஜ இன்ஸ்பெக்டராக இருப்பாரோ என இன்னும் சந்தேகித்து கொண்டே இருக்கிறேன் அத்தனை பொருத்தம்.
அதை போலவே ஆர்த்தியின் பள்ளித்தோழியாக வரும் ஸ்வேதாவின் நடிப்பு அப்பப்பா.. மேலும் ஜோதியின் தாய்,ஆர்த்தியின் பெற்றோர்கள்,இட்லிக் கடைக்காரர்,சில நிமிடமே வந்து போகும் வார்ட்பாய் உட்பட இன்னும் பலரின் செயற்கை முகைமூடி அணியா அசல் நடிப்பினை பற்றி சொல்லி சொல்லி மாய்ந்து போகலாம்.
ஜோதியாக நடிதிருக்கும் ஊர்மிளா பூனே பிலிம் இன்ஸ்டியூட் மாணவியாம் கோல்ட் மேடலிஸ்ட் வேறு.மறைந்த நடிகை ஷோபாவை நினைவுபடுத்துகிறார்.ஷோபாவின் இடம் இன்னும் காலியாக தான் இருக்கிறது அதை இவர் நிரப்பக்கூடிய வாய்ப்புகள் பிரகாசமாய் தெரிகிறது.ரௌத்திரதையும்,கம்பீரத்தையும்,அன்பையும் வார்த்தைகள் இன்றி பார்வையாலேயே அழுத்தமாய் வெளிப்படுத்தி படம் முடிகையில் ஒரு தேவதையாய் நம் நெஞ்சில் நிறைகிறார் .
சாமுராய் படத்தில் ஒரு காட்சி வரும் படத்தின் நாயகியை சிலர் பலாத்காரம் செய்ய முயற்சிப்பார்கள் எங்கே அவள் தோற்றுவிடுவாளோ என நாம் பதறும் வேளையில் அவள் அருள் வந்தவள் போல் வெறிகொண்டு அவர்கள் உதைத்து தள்ளி தப்பிப்பாள் அதை பார்த்ததில் இருந்து நான் பாலாஜி சக்திவேலின் ரசிகன் ஆனேன்.பெண்களை வீரத்துடனும்,அன்புடனும் திரையில் உலவவிடுவது பாலாஜி சக்திவேலின் வழக்கம்.அதுபோலவே இது எதார்த்தமான படம்,நிஜம் எதிர்மறையாக தான் இருக்கும் என முடிக்காமல் அந்த முடிவின் மீது வேறொரு முடிவை எழுதி அன்பையும்,நம்பிக்கையும் பேசும் பாலாஜி சக்திவேலின் கொள்கையை நான் மதிக்கிறேன்.
இப்படமும் முடியும் தருவாயில் சொல்ல முடியா சோகத்தையும் உண்மையின் வலிமை மீதான நிறைய நம்பிக்கையையும் தொண்டை அடைக்க கண்கள் முட்ட ஒரு காதலின் கதையும் சொல்லி விழிகளில் நீரை நிறைக்கிறது.
பல ஆண்டுகள் தயாரிப்பில் இருந்த படமிது. இது இத்தனை சிறப்பாய் வந்ததற்கு மிக முக்கிய காரணமான படத்தின் தயாரிப்பாளர் திரு.லிங்குசாமிக்கு தமிழ்திரைஉலகம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறது.
மொழி,நாடு எல்லைகளை கடந்து உலகமெல்லாம் உள்ள திரை ரசிகர்களால் பார்த்து பாராட்டப்படக்கூடிய ஒரு தமிழ்படத்தை தந்தற்கு பாலாஜி சக்திவேலிற்கும் அவர் குழுவினர்க்கும் லிங்குசாமிக்கும் என் நன்றிகளை வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
திரைப்படங்கள் எப்போது வேண்டுமானாலும் வரும் ஆனால் அற்புதங்கள் எப்போதாவது தான் நிகழும்.அப்படி நம் கண் முன்னே நிகழ்ந்துவிட்ட அற்புதம் இந்த படம்.
ஒரு அருமையான படத்தை பார்த்துவிட்ட சந்தோசத்தில் இருந்த நான்... அருமையான விமர்சனத்தையும் படித்துவிட்டேன். கிட்டத்தட்ட படம் பார்க்கையில் என் மனதில் ஓடிய அத்தனை எண்ணங்களையும் உங்கள் வார்த்தைகளின்மூலம் காண்கிறேன். தமிழ்த்திரை ரசிகர்கள் இப்படத்தை வெற்றிப்படமாக்குவார்கள் என நம்புகிறேன்.
ReplyDeletecan you pls make your blog mobile friendly? it's very hard to read in mobile.
ReplyDeletevimarsanam arumai. will try to watch it in theatre.
Excellent Review!
ReplyDelete>>
ReplyDeleteவழக்கமான எந்த தமிழ் சினிமாவின் பாணியிலும் இல்லாமல் இப்படத்தின் திரைக்கதை மெல்ல மெல்ல மண்ணை துளைக்கும் மண்புழுவினை போல் மெதுவாக பயணிக்கிறது கிட்டத்தட்ட இரண்டாம் பாதியின் கால்வாசி வரை.பின் ஆழமில்லை என நினைத்து நடக்கையில் திடிரென எதிர்ப்படும் ஆழத்தில் முழுதும் நம்மை உள்வாங்கிக் கொள்ளும் ஆற்றினை போல் சட்டென ஒரு சமயத்தில் நம்மை முழுதும் உள்வாங்கிக் கொள்கிறது
குட் லைன்ஸ்
>>>
ReplyDeleteYour comment will be visible after approval.
ஹி ஹி ஹி
நல்லா எழுதியிருக்கிங்க...
ReplyDelete// பிரசன்னாவின் பின்னணி இசை அப்படி ஒன்று இருப்பதே தெரியாமல் இசைந்து நாம் அறியாது உணர்வுகள் மூலம் நம் நெஞ்சை பிசைகிறது. //
சேம் பிஞ்ச்...
அருமையான விமர்சனம்...!! அந்த ‘வானத்தையே எட்டிப் பிடிப்பேன்’ பாட்டைப் பற்றி ஒன்னும் சொல்லாமல் விட்டுட்டீங்களே... :)
ReplyDelete