இது திரைவிமர்சனம் அல்ல, விமர்சனங்கள் எழுதுவதிலும் படிப்பதிலும் கூட ஆர்வம் குறைந்து விட்டது. எனினும் திரைக்கதைகள் மீது மிக ஆர்வமுண்டு சில திரைப்படங்கள் பார்க்கையில் இது இப்படி இருந்திருக்கலாம் என்று யோசனைகளை எழும். அவை சில வேளைகளில் அசலை விட மிக நன்றாக கூட அமைந்து விடுவதுண்டு.நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதுடன் அவை நின்று விடும், அவற்றை பதிவாய் இட்டு பொதுப்பார்வைக்கு வைத்தால் என்னவென்று தோன்றியது.
சமீபத்தில் காஷ்மோரா திரைப்படம் பார்த்தேன், அதன் ப்ளாஷ்பேக் திரைக்கதை இவ்வாறு மாற்றியமைக்கப் பட்டிருக்கலாம் என சில யோசனைகள் தோன்றியது. அதை முதல் முயற்சியாக எழுதி பார்க்கலாம் என துணிந்துவிட்டேன். திரைக்கதை வடிவிலேயே எழுதினால் வாசிப்பதற்கு சற்று சோர்வாக இருக்குமென கதைக்கும் திரைக்கதைக்கும் இடைப்பட்ட வடிவில் முயன்றிருக்கிறேன். காஷ்மோரா பார்த்தவர்களினால் மட்டுமே இவ் வித்தியாசத்தை புரிந்துக் கொள்ள முடியும். படத்தின் ப்ளாஷ்பேக் கதை/காட்சிகளை மனதில் ஒருமுறை ஓட்டிப் பார்த்த பின் தொடர்ந்து படிக்கவும். கருத்துக்கள், விமர்சனங்கள், ஆலோசனைகள் மிக விருப்பத்துடன் வரவேற்கப்படுகின்றன. நன்றி.
இடம்: விக்ராந்தக ராஜ்ஜியம்
காலம்: சில நூற்றாண்டுகளுக்கு முன்
வானை மறைப்பது போல பிரம்மாண்டமாக எழுந்து நின்ற அரண்மனையின் உயரமான உப்பரியில் நின்றுக்கொண்டு மன்னர் தன் தேசத்தை பார்வையிட்டபடி இருந்தார், அவர் அருகே பிரதான அமைச்சர் வந்து வணங்கினார்.
"ஏதும் செய்தி உண்டா அமைச்சரே "
"நமது அருகிலிருக்கும் எதிரிநாட்டு படையொன்று அந்நாட்டு இளவரசன் அர்ஜுனன் தலைமையில் நம்முடன் போரிட கிளம்பி வந்துக் கொண்டிருக்கிறதாம் மன்னா"
அதை கேட்டு மன்னர் யோசிக்கலானார்.
"என்ன சிந்தனை மன்னா, நமக்கு முன் அவர்களால் சில கணங்கள் கூட தாக்கு பிடிக்க இயலாது"
"ஆம் அமைச்சரே நானும் அதை அறிவேன், அதான் குழப்பத்தை விளைவிக்கிறது. நம்மை வெல்லவே முடியாது என தெரிந்தும் நமக்கு சமபலமில்லாத போதும் எதற்கு படையெடுத்து வர வேண்டும்.. ஏதோ உள்காரணம் இருக்க வேண்டும் என தோன்றுகிறது எனக்கு"
அதைக்கேட்டு அமைச்சர் சற்று நேரம் அமைதியாக இருந்தார். மன்னர் கொஞ்சம் சிந்தித்து விட்டு "அடுத்து " என்றார்.
அமைச்சர் புரிந்துக் கொண்டு "நம் படைகள் தயார் நிலையில் இருக்கின்றன அரசே, மற்ற தளபதிகள் அதை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். முதன்மை தளபதி ராஜ்நாயக் அவர் மாளிகையில் இருக்கிறார். தகவல் சொல்வதற்கு ஆள் அனுப்பப்பட்டிருக்கிறார்கள்"
ராஜ்நாயக் மாளிகை, விசாலமான படுக்கையறை
இரவு
விருந்திற்கு செல்பவன் போல நன்றாக அலங்கரித்துக் கொண்டு ராஜ்நாயக் அறை மத்தியில் நின்றிருந்தான். அவனது பணியாள் அவனருகில் வந்தான்.
"ஏன் இவ்வளவு தாமதம் " ராஜ்நாயக் கேட்டான்
"நாம் சென்ற முறை வென்ற நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட மன்னரின் மனைவிகள் மொத்தம் 27 பேர், காதலிகள் 30 பேர். ஒவ்வொருவராக கொண்டு வருகிறேன் " பணியாள் பதிலளித்தான்
"முட்டாள் வானத்து நட்சத்திரங்களை மொத்தமாக பார்ப்பது தானடா அழகு, போய் மொத்தமாக கொண்டு வா" ராஜ்நாயக் கைகள் உயர்த்தி ஆணையிட்டான் . பின் அங்கு ஓரமாக நின்றிருந்தவர்களை காட்டி கேட்டான்
"அவர்களெல்லாம் யார்?
"அவர்கள் பணிப்பெண்கள்"
"பெண்களில் என்னய்யா பணிப்பெண்கள், அவர்களையும் கணக்கில் சேர்த்துக் கொள் " என கண் சிமிட்டி சிரித்தான் ராஜ்நாயக். பணியாள் சென்றதும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு சிலையை கவனித்து அதை நோக்கி சென்றான்.
படிகளில் ஏறி ராஜ்நாயக் செல்கையில், பின்னாலிருந்து ஒரு குரல் வந்தது " தளபதி அது சிலை"
"இருக்கட்டும் பெண் சிலை தானே " சிரித்தான் ராஜ்நாயக்
அவன் அந்த சிலையை அணைத்து தன் கைகளில் சாய்த்து பிடித்தான். சிலை முகத்தில் ஒரு பெண் முகம் தோன்றியது. இளவரசி ரத்னமகாதேவியின் முகம் தான் அது.
போர்க்களம். மலைகளுக்கு இடையில் பரந்த வெட்டவெளிப்பரப்பு .
பகல்
எதிரிநாட்டு படைகள் அணிவகுத்து போருக்கு தயாராக நின்றுக் கொண்டிருக்கிறது. அதன் மத்தியில் சிறு தேரில் இளவரசன் அர்ஜுனன் நின்றுக் கொண்டிருக்கின்றான், போருக்கான வெறியுடன் எதிரே தொலைவில் வரும் ராஜ்நாயக் படையை பார்த்தபடி இருக்கிறான்.
ராஜ்நாயக் திறந்த ரதத்தில் முன்னே வர, ஏனைய தளபதிகள் அவன் பின்னேயும் அதற்கு பின் சிறு படையும் விரைந்து வருகிறது. முன்னேறி சென்றபடியே ராஜ்நாயக் திரும்பி பார்க்க, பின் வந்துக் கொண்டிருக்கும் தளபதிகளில் ஒருவன் தன் கையை பக்கவாட்டில் நீட்டுகிறான்.காலாட் படைகள் அங்கேயே நின்று கொள்கின்றன. ராஜ்நாயக் முன்னேயும் பிற தளபதிகளும் மட்டும் மிக வேகமாக முன்னேறுகின்றனர்.
உக்கிரமாக போர் நடக்கிறது. ராஜ்நாயக் மற்றும் தளபதிகள் எதிரிநாட்டு வீரர்களை அநாயசமாக வெட்டி சாய்க்கிறார்கள். ஏதிரி வீரர்கள் நூறு பேர் ராஜ்நாயக்கை சூழ்ந்து கொள்கிறார்கள், நட்சத்திர வியுகத்தில் அவனை நெருங்குகிறார்கள். மத்தியில் நிற்கும் ராஜ்நாயக் தன் உடையிலிருந்து சுருள் கத்திகளை உருவுகிறான். இரண்டு கைகளிலும் சுருள் கத்திகளுடன் வெறித்தனமாக போர் புரிகிறான். அனைவரையும் கொன்று குவித்து வெறிக் கூச்சலிடுகிறான்.
பிணங்கள் குவியலாக கிடக்க, படிக்கட்டுகளில் ஏறுவது போல் அதிலேறி மீதமிருக்கும் எதிர்நாட்டு படைகளை ராஜ்நாயக் பார்க்கிறான். அங்கே சொற்பமான படையே மச்சமிருக்கிறது, இளவரசன் அர்ஜுனன் தீவிரமாக சிந்திக்கும் முகத்துடன் தேரில் நின்றிருக்கிறான்.
மீதமிருக்கும் எதிரிநாட்டு படைகள் ஒன்றாக சேர்ந்து தங்கள் கேடயங்களை அடுக்கி அதன் மூலம் ஒரு பாதுகாப்பு சுவரை உருவாக்கி மறைக்கிறார்கள். ராஜ்நாயக் அவர்களை நோக்கி வேகமாக நடக்கிறான். தன் கைகளை பக்கவாட்டில் காட்ட, மற்ற தளபதிகள் இருந்த இடத்திலேயே தங்கி விடுகின்றனர். ராஜ்நாயக் நடை ஓட்டமாக மாறுகிறது, முகத்தில் ஆக்ரோஷத்துடன் வேகம் எடுக்கிறான். அவனது குதிரைகள் அவனது ரதத்தை அவனருகில் இழுத்தபடி ஓடி வருகிறது, அவன் அதில் ஏறிக் கொள்கிறான் . ரதத்தை அதிவேகத்தில் விரட்டுகிறான். எதிரிநாட்டு படைகளை நெருங்கியதும் தன் வாளால் குதிரைகள் பூட்டியிருக்கும் கயிற்றை அறுக்கிறான். குதிரைகள் ஒரு பக்கம் விலகி ஓட ராஜ்நாயக்கும் எம்பி ஒரு
பக்கத்தில் குதிக்கிறான். வேகமாக வந்த ரதம் கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு உருண்டோடி எதிரிப்படை மீது மோதுகிறது.
கேடய பாதுகாப்பு அமைத்து நின்ற வீரர்கள் ஆளுக்கொரு திசையில் பறக்கின்றனர். ராஜ்நாயக் எழுந்து பார்க்கிறான். அந்த பக்கத்தில் முன்பிருந்த இளவரசன் அர்ஜுனனை காணவில்லை, ராஜ்நாயக் திகைக்கிறான் .
அரண்மனை
பகல்
மிக உயரமான மாடத்தில் அரசன் நின்றிருக்க, அமைச்சர்கள் மற்றும் சில அதிகாரிகள் உடன் நிற்கின்றனர். ராஜ்நாயக் அங்கே வருகிறான். போரில் வெற்றியடைந்தசெய்தி கேட்டு அரசர் மகிழ்வுடன் ராஜ்நாயக்கை அனைத்துக் கொள்கிறார்.
மன்னர் மகிழ்ச்சியுடன் நமக்கு கீழ் எத்தனை எத்தனை வெற்றிகள், கண்ணுக்கு எட்டும் தூரம் வரை நம் கீழான தேசங்கள், எல்லாம் உன்னால் தான் உனக்கு என்ன வேண்டும் கேள் ராஜ்நாயக்"
"கண் படாத இடத்தில் தான் இந்த ராஜ்நாயக் விருப்பமெல்லாம் மன்னா" சொல்லிவிட்டு சிரிக்கிறான் ராஜ்நாயக் அவன் பார்வை வேறு பக்கம் திரும்புகிறது அங்கே இளவரசி ரத்னமகாதேவி இரண்டு கைகளிலும் வாள் ஏந்தியபடி சில வீரர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறாள்.
ராஜ்நாயக் இளவரசியை நெருங்கி செல்கிறான், மற்றவர்களும் உடன் செல்கிறார்கள். "பூத்தொடுக்கும் கரங்களுக்கு எதற்கு வாள் பயிற்சி" ராஜ்நாயக் கூறுகிறான்.
ராஜ்நாயக் குரலை கேட்டு இளவரசி பயிற்சியை நிறுத்துகிறாள். மற்ற வீரர்கள் அவனை பணிந்து வணங்குகிறார்கள். ராஜ்நாயக் கள்ளச்சிரிப்புடன் ரத்னமகாதேவியை நோக்குகிறான். இளவரசி வெறுப்புடன் கூடிய ஒரு பார்வையுடன் அவனை பார்த்து விட்டு வேறு பக்கம் திரும்பிக் கொள்கிறாள்.
"ஆமாம் எதிரிநாட்டு இளவரசன் அர்ஜுனன் என்ன ஆனான்" அமைசர்களில் ஒருவர் கேட்கிறார். "கோழை.. எங்கோ தப்பி ஓடிவிட்டான்" இளவரசி மீது பார்வையை வைத்த படியே பதில் சொல்கிறான் ராஜ்நாயக் . அதை கேட்டு ரத்னமகாதேவி முகத்தில் சில மாறுதல்கள் தோன்றுகிறது. அதை ராஜ்நாயக் கவனித்து மனதுக்குள் குறித்துக் கொள்கிறான்.
நீளமான அரண்மனை படிக்கட்டுகளில் யோசித்தபடி ராஜ்நாயக் இறங்கி செல்கிறான்.
அரண்மனை
இரவு
அரண்மனையில் இருக்கும் ஒரு சாளரம் வழியே தூரத்தில் அரண்மனையின் சில பகுதிகளும் ஒரு வாயிலும் அதற்கு அப்பால் சிறு தோட்டமும் தெரிகிறது, முதலில் ஒரு தீப்பந்தத்தின் வெளிச்சம் தோன்றுகிறது அடுத்து தீப்பந்தம் ஏந்தியபடி ஒரு பணிப்பெண் வருவது தெரிகிறது. அவளுடன் முக்காடு அணிந்த படி இன்னொரு பெண் வருகிறாள், வாயிலை நெருங்கியதும் அவள் முக்காடை நீக்குகிறாள் அங்கே ஒரு வீரன் நின்றுக் கொண்டிருப்பதும் தெரிகிறது. தூரத்தில் இருந்தும் அந்தப் பெண் இளவரசி ரத்னமகாதேவி என்று தெளிவாக தெரிகிறது, பணிப்பெண் தீப்பந்தத்துடன் அங்கேயே நிற்க ரத்னமகாதேவி அந்த வீரனுடன் சென்று இருட்டில் மறைகிறாள். சாளரத்துக்கு இந்தப்பக்கத்தில் நின்று ஒருவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான். அரசனின் இரண்டாவது மகனும் ரத்னமகாதேவின் தம்பியுமான இளவரசன் தான் இது.
மலைப்பாதை
இரவு
சிலர் வீரர்கள் முன்னேயும் பின்னேயும் பாதுகாப்பாய் செல்ல, நடுவில் ஒரு குதிரை செல்கிறது, இளவரசன் அர்ஜுனன் அதை ஓட்டிச்செல்ல அவன் பின்னே ரத்னமகாதேவி அமர்ந்திருக்கிறாள். திடிரென அவர்கள் செல்லும் பாதை முன்பு தீப்பிடித்து எரிகிறது, அவர்கள் வழிமறிக்கப்படுகிறார்கள்..
மற்றவை திரைப்படத்தில் உள்ளது போல்...