Sunday, November 27, 2011

மயக்கம் என்ன - வண்ணங்களின் இசை

 திரைப்பட விமர்சனம் எழுதும்போது படத்தின் கதையை சொல்ல மாட்டேன் என சொல்லி இருந்தேன் எனினும் மயக்கம் என்ன படத்தின் கதையை தெரிந்துக் கொண்டு பார்ப்பதே நலம். கேமரா வியு ஃபைண்டர் வழியே உலகத்தை பார்த்து அதில் பரவசம் அடையாதவரும், ஒரு காட்சியை புகைப்படமாக எடுத்து நிஜத்திற்கும் அதற்கும் உள்ள கவித்துவ வித்யாசத்தை ரசிக்காதவரும் யாரேனும் உள்ளனரா?

 வண்ணங்களின் ஓசையை கேட்டு இருக்கீர்களா? உங்களுக்கு பிடித்த வண்ணத்தை பார்கையில் ஏற்படும் உணர்வும் பிடித்த இசையை கேட்கையில் ஏற்படும் உணர்வும் ஒன்றா? வெவ்வேறானதா?

 உங்களின் கனவை, நீங்கள் எதுவாக இருக்க விரும்புகிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளுதலும் அத்தகைய நுட்பமான ஒன்றுதானே? உள்ளுணர்வின் மொழியை புரிந்து கொள்ளுதலும் அப்படிப்பட்ட ஒன்றுதானே? அப்படி அதன் கனவை கண்டடைந்து அதை நிஜமாக்க போராடும் வாழ்க்கை எப்படி இருக்கும்?

 அப்படி தனது கனவான wildlife photograph-ல் சிறந்த புகைபடக் கலைஞனாக ஆவதற்காக போராடும் கார்த்திக் என்பவனின் வாழ்க்கையை சொல்லும் படமே "மயக்கம் என்ன".சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் விக்ரமன் பாணி கதை தான்.

 இந்த படத்தின் முதல் பாதி ஒரு அற்புதம்.இரண்டாம் பாதி சிலரின் பொறுமையை கொஞ்சமும் மற்றவரின் பொறுமையை அதிகமும் சோதிக்கும்.

முதல் பாதி..
 கனவும் காதலுமாய் கலந்து செல்கிறது முதல் பாதி.எதை காதல் என்பது? சரியான வரையறை ஏதும் உள்ளதா? வருடக்கணக்காய் ஒரு பெண் பின்னே சுற்றி திரிவதும்,ஒருதலைக் காதல் என்ற பெயரில் உயிரை விடுவதும் கூட காதல் இல்லாமல் வெறும் பருவக் கோளாறாய் இருக்கலாம்.அதற்கு நேரெதிராய் வெளியில் காட்டிக் கொள்ளாமல்,சொல்ல படாமல் எத்தனையோ உண்மை காதல் இருக்கும்.

 சொல்லப்படாததும் சொல்ல தேவையற்றதுமே உண்மைக் காதல்.புரிதலின் மொழியில் பேசிக் கொள்ளும் மனங்களின் காதல் அது.அப்படி ஒரு காதல் இந்த படத்தின் முதல் பாதியில் வருகிறது.

 பார்த்த நொடியில் உங்களுக்கு பிடித்துவிடக் கூடிய பெண் உங்கள் நண்பனின் காதலியாக அறிமுகமானால் எப்படி இருக்கும் அப்படி தான் ஆரம்பிக்கிறது இப்படம் .பின் அப்படிப்பட்ட காதலின் முரண்களையும்,கனவை நிஜமாக்க போராடுகையில் நிகழும் வாழ்வின் முரண்களையும் சேர்த்து அற்புதமான அனுபவமாக ஆக்கியிருக்கிறார் செல்வா(செல்வராகவன்).

இரண்டாம் பாதி..
 படத்தின் இரண்டாம் பாதி வெற்றிக்காக போராடுபவனின் கதையிலிருந்து மெல்ல நழுவி பின் ஆணின் வெற்றிக்கு பின்னால் முழுக் காரணமாய் இருக்கும் பெண்ணை பற்றிய கதையாக மாறுகிறது.

 இந்த படத்தை நாலு சண்டை,காமடி ட்ராக் என வழக்கமாய் எடுக்க முடியாது தான் என்றாலும்.. வாரணம் ஆயிரம் படத்தில் கெளதம் மேனன் ஒரு தகப்பன்-மகன் வாழ்வை தொய்வின்றியும், ஒரு சாதாரணன் இந்தியாவிலேயே பெரிய தொழிலதிபர் ஆவதை மணி ரத்னம் குரு திரைபடத்தில் சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்க.. இதில் சற்று சறுக்கியிருக்கிறார் செல்வா.

இரண்டாம் பாதி கதை கொஞ்சம் தாவி தாவி செல்கிறது.எதை நோக்கி போகிறது என சிறு குழப்பம் வருகிறது படத்துடன் ஒன்றுவதற்கு நேரம் பிடிக்கிறது.

 அந்த இடைவேளை காட்சி ஒரு கவிதை.அக்காட்சியுடன் சரியாய் பொருந்தும் இசை(தீம் மியுசிக்),ஒளி,நடிப்பு என எல்லாம் சேர்ந்து க்ளாஸ்.இடைவேளை அடுத்து வரும் சில காட்சிகளும் மிக சுவாரஸ்யம்.அதில் வசனமில்லாத காட்சி எத்தனை அழுத்தமாய் இருக்கும் என்பதை அழுத்தமாய் நிரூபிக்கிறார் செல்வா.

 செல்வாவை பற்றி சொல்ல வேண்டும்.யதார்த்தத்தை ஆழமாய் உணர்த்துகிறார் அதே வேளையில் நம்ப முடியாத அதிக பரிச்சயமில்லாத சூழலையும் காட்டுகிறார்.

 இதில் கூட ஐந்து நண்பர்கள் ஆண்கள் முவர்,பெண்கள் இருவர் எப்போதும் ஒரு நண்பனின் வீட்டிலேயே இருக்கிறார்கள்.ஒரே அறையில் ஒன்றாய் தூங்குகிறார்கள் அவர்களுடன் நண்பனாய் பழகும் ஓர் அப்பா.செல்வா அவரை ட்ரிம் அப்பா என குறிப்பிடுகிறார்.இதே போல் இன்னும் பல இருக்கின்றன.

 சண்டை போடும் நண்பர்களை அந்த அப்பா சமாதனம் செய்து வைக்கும் காட்சி அட போடவைக்கும் ரகம்.காதலை உறுதி செய்துகொள்ள செல்வா சொல்லியிருக்கும் டெக்னிக்கும் 'அட'.

நாயகியிடம் நாயகன் அறை வாங்குவதை அப்பட்டமாய் காட்டுகிறார் ஆனால் ஒரு ஆண் பெண்ணை அடிக்கும் காட்சியில் அதை திரையில் காட்டாமல் சத்தத்தை மட்டும் கேட்க வைக்கிறார்.

யாமினி..
 கூந்தலை காற்றில் பறக்க விட்டபடி முப்பத்தி இரண்டு பற்களும் தெரியும்படி சிரித்துக் கொண்டே திரும்பி அறிமுகமாகும் வழக்கமான நாயகி இல்லை.படம் ஆரம்பித்து இருபது நிமிடம் கழித்து தான் முதன்முதலாய் புன்னகைக்கிறார்.அதுவரை முறைப்பு தான்.

 செல்வாவின் அனைத்து கதாநாயகிகள் போல் இவருக்கும் சர்வ சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.அவரது அப்பா அம்மா பற்றி சொல்லவேயில்லை விருப்பப்படி சுற்றுகிறார்.நாயகனை கை நீட்டி அடிக்கிறார்.மிக தன்னம்பிக்கையுடன் இருக்கிறார் போராடுகிறார்.செல்வா வார்த்தையில் சொன்னால் இரும்பு மனுஷி.

ஹிரோ..
 படத்தின் நிஜ ஹிரோ ராம்ஜி.நாயகன் ஒரு போட்டோகிராபர் என்பதால் அவன் படமெடுக்கும் காட்சிகளும் அவனது பார்வையில் காட்டப்படும் காட்சிகளும் சிறப்பாய் அமைந்தால் தான் அவனது திறமையாக நாம் அதை உணர முடியும்.அதன் பின்பே அவன் மீது நமக்கு மரியாதையும் அவன் வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணமும் எழும்.படத்தில் ஒரு பாத்திரமாகவே மாறிவிட்ட ஒளிப்பதிவை மிக மிக சிறப்பாய் செய்திருக்கிறார் ராம்ஜி.

 நாயகன் காட்டில் படமெடுக்கும் அந்த பத்து நிமிட காட்சிகளுக்காகவே படத்தை பார்க்கலாம்.அதில் ராம்ஜியின் உழைப்பு வார்த்தைகளில் விளக்க முடியாதவை.

தனுஷ்..
 தனுஷ் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.கார்த்திக் என்பவனை நிஜமாய் திரையில் உளவ விட்டிருக்கிறார்.க்ளைமாக்ஸில் கொஞ்சம் அடக்கி வாசித்து இருக்கிறார்.எனினும் கண்களால் பேசும் இறுதி ஷாட் ஷார்ப்.

 படத்தில் மிக சிறப்பாய் நடித்திருக்கும் மற்ற கதாபாத்திரங்கள்,இசை,எடிட்டிங்,பாடல் படமாக்கப்பட்ட விதம்,அங்கங்கே எட்டிப் பார்க்கும் சினிமாத்தனம் எல்லாவற்றையும் வண்ணத்திரையில் காண்க.

 கமர்சியல் விஷயங்களை தள்ளி வைத்து விட்டு படத்தில் என்னதான் இருக்கிறது என்று பார்க்க நினைப்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்.

படம் முடிந்து என்ட் டைட்டில் ஓடி முடியும் வரை காத்திருந்து கடைசியாய் வெளிவரும் சினிமா காதலர்கள் தவற விடக்கூடாத படம்.

நான் இரண்டாம் முறை பார்க்க போகிறேன்.

9 comments:

 1. நன்று! ஆனால் இன்னும் தெளிவாய் சுருங்கச் சொல்ல கற்றுக் கொள்ளுங்கள்! ராஜனின் விமர்சனத்தை ஒருமுறை படித்துவிடுங்கள்.. நான் சொல்லவந்தது புரியும்!

  ReplyDelete
 2. விமர்சன முடிவு அருமை..இன்னும் பார்க்க போகலையான்னு கேட்பதை விட "நான் இரண்டாம் முறை பார்க்க போகிறேன்" :)

  ReplyDelete
 3. Your review is very nice. Thanks for your review.

  You have highlighted the one thing that this movie didn't portray heroine's family and siblings. This is what i noticed after watching the movie. Good Observation!!

  I have noticed one contradiction in this movie is..Heroine was shouting hero's friend inside the car, when he talked bad about her husband(hero). She said that her husband is very good and will not be a street fighter. But in the previous scene, he broke the groom's head in the reception ceremony, unnecessarily.

  ReplyDelete
 4. முதல் சினிமா விமர்சனம் - நன்றாக இருக்கு !
  தொடரட்டும்
  - அடுத்து போராளி & ஒஸ்தி
  waiting ...

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் நல்லா எழுதி இருக்கிறீங்க ..அட நீங்களும் கலர் கலரா எழுதி இருக்குறீங்க .. மயக்கம் என்ன பாதிப்பா
  By
  Gundubulb(twitter)

  ReplyDelete
 6. IT WAS REALLY FINE REVIEW BUDDY. INDEED RAJANLEAKS REVIEW WAS ALSO DAMN GOOD... KEEP UP UR GOOD WORK

  ReplyDelete
 7. Wow! very nice review! Many did not like the movie. You fall in the category of those who like and have effectively given the reasons behind it. Good job! Selva should thank you :-)
  amas32

  ReplyDelete
 8. சாதரணமா படம் பாக்கறதுக்கும், விமர்சனம் எழுத படம் பாக்கறதுக்கும், உள்ள வித்தியாசம் இப்ப தெரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன். வாழ்த்துகள்

  ReplyDelete
 9. நேர்மையான,கூர்மையான விமர்சனம்.எவ்ளோ உற்று கவனித்திருக்குறீர்கள் என்பது புரிகிறது.பதிவிற்கு பின்னாலிருக்கும் உங்கள் உழைப்பிற்கு 'சபாஷ்'.படம் பார்க்காம இதுக்குமேல சொல்லக்கூடாது,பார்த்துட்டு வந்து படிக்கிறேன்.

  ReplyDelete