இந்திய மொழியில் பிரம்மாண்டமா படம் எடுக்கும் போதெல்லாம் ஹாலிவுட் படம் மாதிரின்னு பில்டப் கொடுக்கறது வழக்கம்.ஹாலிவுட் திரைப்படங்கள் உலகம் முழுதும் பிரபலமா இருப்பதும் ரசிகர்கள் பெற்றிருப்பதும் அதற்கு காரணம்.படம் 'காட்டுவதில்'உள்ள தந்திரங்கள் எல்லாம் ஹாலிவுட் காரர்களுக்கு அத்துப்படி.
வெத்து பிரம்மாண்டம் மட்டும் சினிமா இல்லை திரைக்கதை தான் அதன் துருப்பு சீட்டு.நல்ல திரைக்கதை ப்ளஸ் பிரம்மாண்டம் தான் வெற்றி ரகசியம்.டைனோசர் கிங்காங் அனகோண்டா எல்லாம் அதனால் தான் ஜெயித்தது.பக்கா திரைக்கதை இல்லைன்னா அதெல்லாம் வெறும் சர்க்கஸ் கூத்தாகிருக்கும்.
நம்மூரில் ஹாலிவுட் மாதிரி எடுக்கறேன்னு படம் காட்டி திரைக்கதையில் கோட்டை விட்டு அல்லது காப்பி அடித்து,பிரம்மாண்ட படம் என்ற லேபிளோடு சொதப்புவது தொண்ணுத்தி எட்டு தொண்ணுத்தி ஒன்பதா நடக்கறது தான்.அப்படியில்லாமல் அசத்தல் திரைக்கதையுடன் இயக்குனர் ராஜ மௌலி திரையில் செய்திருக்கும் மேஜிக் 'நான் ஈ'.
படம் ஆரம்பிச்சு மூணு நிமிஷத்துல மூன்று முக்கிய கதாபாத்திரங்களையும் அறிமுகப்படுத்துவது.அஞ்சு நிமிஷத்துல அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனையை சொல்வது..பத்தாவது நிமிஷத்துல எதிர்பாராத திருப்பத்துடன் கதையை தொடங்குவது என ரெக்க படபடக்க பறக்குது ஈ.
நானி சமந்தா சுதிப்..நானிக்கு சமந்தா மீது காதல் என்ற ஒரு வார்த்தைக்குள் அடக்க முடியாத அளவு காதல்.விரும்பும் பெண்களை எல்லாம் ஜஸ்ட் லைக் தட் மயக்குபவர் சுதிப்.சுதிப்பின் கண்ணில் சமந்தா பட நானி இடைஞ்சலா வர,நானியை கொல்கிறார் சுதிப்! காதலியை காப்பாற்ற,இறந்த நானி 'நான் ஈ'ஆக மாறி சுதிப்பை பழி தீர்ப்பது தான் படம்.
நானி இறப்பது பின் ஈயாக மறுபிறவி எடுப்பது என சில காட்சிகளில் "என்னாது இது.." என உங்களுக்குள் லாஜிக் அலாரம் அடிக்கும்,அதை அப்படியே ஆஃப் பண்ணிட்டு படத்தை பார்ப்பதை தொடர்ந்தீங்கனா கொடுத்த காசுக்கு மேலயே திருப்திப்படுத்தும் 'நான் ஈ'.
சமந்தாவையே சுற்றி வரும் நானியின் காதல் ஒரு நிறம்,வார்த்தையில் சொல்லாமல் சுற்ற விட்டு செய்கைகள் மூலம் வெளிப்படும் சமந்தாவின் நேசம் ஒரு நிறம்,ப்ளாங் எஸ்.எம்.எஸ் அனுப்புவதும் அதை புரிந்து கொள்வதும் என அவர்களுக்குள் இருக்கும் புரிதல் ஒரு நிறம் என நானி சமந்தா காதல் காட்சிகள் எல்லாம் வானவில்லின் அழகு.மௌனமே பேசும் காதலியின் கண் அசைவிற்கும் விரல் அசைவிற்கும் சரியான அர்த்தம் கண்டுக் கொள்றதும் தப்பான அர்த்தம் கற்பித்து கொள்றதும் என நானியின் பாத்திரம் வானவேடிக்கையின் அழகு.
நானி தனக்கு கிடைச்ச கொஞ்ச நேரத்தில் முடிஞ்ச அளவு ஸ்கோர் பண்றார்,என்ன குரல் தான் கொஞ்சம் படுத்துது.கன்னட சினிமாவின் பிரபல ஹீரோ சுதிப் இதில் வில்லனா நடித்திருப்பது ஆச்சர்யம்.வில்லன் பவர்ஃபுல்லா அமைஞ்சா படமும் நல்லாவே அமைஞ்சிடும் இதிலும் அப்படியே.முதல் நொடியில் இருந்து கடைசி வரை சுதிப் தான் படத்தில் அதிகம் வரார் நடிப்பில் கொஞ்சம் சொதப்பியிருந்தாலும் போர் அடித்துவிடும் ரிஸ்க் இருக்கு,ஆனா கேரக்டரை ரஸ்கா சாப்பிட்டிருக்கார் மனிதர்.
'பிந்து'ங்கிற பேரே பிடிச்சு போயிடுது சமந்தா நடிச்சதால.கடல் படத்திலிருந்து சமந்தா நீக்கப்பட்டாரா ஐயகோ கண்ணீர் இல்லையா கம்பலை இல்லையா என இணையத்தில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களே நடந்துது,சமந்தாவிற்கு அத்தனை ரசிகர்கள்.படத்தோட ஈர்ப்பின் மையம் சமந்தா தான் அழகோ அழகு.நடிப்பை பற்றி சொல்லணும்னா அழகோ அழகோ அழகு.
சில இடங்களில் கொஞ்சம் அதிகம் வாசித்திருப்பது போல் தெரிந்தாலும் வசனம் குறைவான படத்துக்கு மரகதமணியின் இசை பெரிய கூட்டல்.ஆங்காங்கே சாரல் போல மெலடிகளும்,"நுண்சிலை செய்திடும் பொன் சிலையே பென்சிலை சீவிடும் பெண் சிலையே என் நிலை கொஞ்சம் நீ பார்ப்பாயா" என கார்கியின் வரிகளும் அட அடடடா.. ஓ ஹோ.
"ஈ டா ஈ டா ஈ டா! கண்ணு ரெண்டில் தீடா நரகம் உந்தன் வீடா மாத்திடுவேன் வா டா.." பாடலில் முரட்டு வேகம் எடுக்குது படம்,அதில் ஈ செய்யும் சாகசங்கள் எல்லாம் செம விஷுவல் ட்ரீட்.
சரியான இடத்தில் முந்தைய காட்சிகளின் க்ளிப்பிங் சேர்த்து திரைக்கதைக்கு சுவாரஸ்யம் கூட்டியிருப்பது எடிட்டரின் சாமர்த்தியம்.கேமராவும்,டீசண்டான கிராபிக்ஸ் வேலைகளும்,வசனமும் அடுத்தடுத்த கூட்டல்கள்.
பாதியில் திடிரென கயிறு போட்டு ஏறி படத்துக்குள் சந்தானம் நுழையும் போது "நல்லா தானே போய்ட்டிருக்கு"ன்னு தோணுது,நல்லவேளையா அவர் அப்படியே அப்பீட் ஆகிக்குறார்.இரண்டாம் பாதியில் ஈ கொஞ்சம் டயர்டாகி ஸ்லோ ஆகுது,பின் சுதாகரிச்சு பிக்அப் ஆகுற திரைக்கதை பரபரத்து டச்சிங்கா ஒரு க்ளைமாக்ஸ் உடன் அடங்குது.
ஒரு மாற்று சினிமா எந்தளவு முக்கியமோ அதே அளவு நல்ல கமர்சியல் படங்களும் முக்கியம்.வலிக்காம ஊசி போட தெரிந்த டாக்டர் மாதிரி பார்வையாளன் பொறுமையை சோதிக்காம அவன் ரசனையை உயர்த்த இம்மாதிரி படங்களால் முடியும்.மனிதனை ஒரு ஈயால் என்னெல்லாம் பாடுபடுத்த முடியும்னு யோசிச்சு அதுல காதல்,ஹீரோயிஸம் எல்லாம் சேர்த்து ரசிக்கும் படியா வித்யாசமா படம் எடுக்க முடியும்னு நிரூபிச்சிருக்கும் ராஜ மௌலிக்கும் உடன் எழுதியிருக்கும் ஜனார்த்தன் மஹரிஷிக்கும் சபாஷ்.
சில குறைகள் இருக்கு அதையும் தாண்டி ரசிக்கும் படியாகவே இருக்கு படம்.குழந்தைகளுக்கு மிக பிடிக்கும் குழந்தையாய் மாறிவிடும் பெரியவர்களுக்கும் பிடிக்கும்.இப்படம் இந்தியா முழுதும் நல்ல பெயர் எடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
எனக்கென்னமோ இப்படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் பண்ணாலும் பண்ணுவாங்கன்னு தோணுது !
தமிழ்ல சொன்ன சரியா வருமா தெரியல,ஆங்கிலத்தில் சொல்றேன்
"ஐ லவ் திஸ் மூவி"